Published : 17 Nov 2016 03:16 PM
Last Updated : 17 Nov 2016 03:16 PM

விராட் கோலி 151 நாட் அவுட்; புஜாரா சதம்: இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள்

விசாகப்பட்டணத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட முடிவில் 241 பந்துகளை இதுவரை சந்தித்துள்ள கேப்டன் விராட் கோலி 15 பவுண்டரிகள் உட்பட 151 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர்.

ரஹானேயின் மோசமான ரன் எண்ணிக்கை தொடர்ந்தது. இன்று 23 ரன்கள் எடுத்த அவர் ஆட்டத்தின் 89-வது ஓவரில் குக் புதிய பந்தை எடுத்து ஆண்டர்சனிடம் அளிக்க விளையாட வேண்டிய தேவையே இல்லாத, வெளியே சென்ற பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்தார், பேர்ஸ்டோ கேட்சிற்குத் தயாராகவே இருந்தார்.

ஒரு பந்து சென்று புதிய பேட்ஸ்மென் அஸ்வினும் பதற்றமாக ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்தை தள்ளினார் நல்ல வேளையாக கல்லி இல்லை இருந்திருந்தால் அஸ்வினும் நடையைக் கட்டியிருக்க வேண்டியதுதான். ஆனால் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்தது, குக் கணிக்கத் தவறிய கள வியூகத்தினால் இன்னொரு விக்கெட் வாய்ப்பை இழந்தார்.

இந்திய அணியில் அமித் மிஸ்ராவுக்குப் பதிலாக அறிமுக போட்டியில் ஜெயந்த் யாதவ் களமிறக்கப்பட்டுள்ளார். எனவே இரண்டு ஆஃப் ஸ்பின்னர்கள்.

காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல், ரஞ்சி சதத்தை தொடர்வது போல் பிராடின் பந்தை பேக் அண்ட் அக்ராஸ் சென்று விட்டு விடாமல் முன்னால் வந்து ஸ்விங்கின் திசைக்கேற்ப ஆட எட்ஜ் ஆகி ஸ்டோக்சிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார். ரன் இல்லை.

முரளி விஜய், ஃபுல் லெந்த்தில் வீசிய பந்துகளை அருமையாக டிரைவ் ஆடி 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து தன்னம்பிக்கையுடன் ஆடி வந்த நிலையில் காயத்திலிருந்து மீண்டும் ஆட வந்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் அருமையான, துல்லியமான பவுன்சர் ஒன்றை விஜய் முகத்தை குறிவைத்து வீச விஜய் தடுத்தாடும் நோக்கத்துடன் தவறாக மட்டையை உயர்த்த பந்து கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது.

கோலி, புஜாரா இரட்டை சதக் கூட்டணி:

தொடக்கத்தில் விராட் கோலி, புஜாரா இடையே ரன் ஓடுவதில் சரியான புரிதல் இல்லை. இதனால் புஜாரா ஒரு முறை ரன் அவுட் வாய்ப்பில் பிழைத்தார், இன்னொரு முறை மட்டை கையில் இருந்து தவறியது, இந்த வாய்ப்பையும் இங்கிலாந்து பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் இருவரும் செட்டில் ஆயினர். அப்போது புஜாரா காலியாகியிருந்தால் நெருக்கடியில் கோலியையும் அவர்கள் வீழ்த்தியிருக்கலாம், இதுவும் அதிர்ஷ்டம்தான்!

விராட் கோலி நன்றாக ஆடினாலும் சில சமயங்களில் பிராடின் லெக் கட்டரை ஆட முற்பட்டு பீட்டன் ஆனார். ஆனாலும் 87 பந்துகளில் 7 பவுண்டரியுடன் அவர் அரைசதம் எடுத்தார், முன்னதாக புஜாராவுக்கு அடில் ரஷித் பந்து ஒன்று கால்காப்பைத் தாக்க பலத்த முறையீடு எழுந்தது, நடுவர் நாட் அவுட் என்றார் ஆனால் ரீப்ளேயில் அது அவுட் என்றே காட்டியது, ரிவியூ செய்திருந்தாலும் கள நடுவர் தீர்ப்பைத்தான் உறுதி செய்திருப்பார்கள். இதனால் ரிவியூ செய்யவில்லை. கொஞ்சம் மெதுவாக ஆடிய புஜாரா 113 பந்துகளில்தான் அரைசதம் கடந்தார்.

மேலும் கோலி 56 ரன்களில் இருந்த போது ஸ்டோக்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை கோலி ஹூக் செய்ய அடில் ரஷீத் கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார், மேலும் சதம் அடித்தப் பிறகு ரிவர்ஸ் ஷாட் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், அது நெருக்கமான ஒரு எல்.பி.தான். ஆனால் நடுவர் கொடுக்கவில்லை. அதன் பலன் விராட் கோலி 151 நாட் அவுட்.

முன்னதாக 22/2 என்ற நிலையில் விராட் கோலி, புஜாரா சில அருமையான பந்து வீச்சை நிதானத்துடன் எதிர்கொண்டு உணவு இடைவேளை வரை விக்கெட் இல்லாமல் ஸ்கோரை 92 ரன்களுக்கு உயர்த்தினர். ஸ்பின் பந்து வீச்சை மிக எளிதாக ஆடினர். உணவு இடைவேளை முடிந்து தேநீர் இடைவேளை வரை மேலும் விக்கெட் விழாமல் ஆடிய கோலி, புஜாரா 210/2 என்று பெவிலியன் செல்லும் போது இருவரும் 90களில் இருந்தனர், அதாவது புஜாரா 97 ரன்களிலும் கோலி 91 ரன்களிலும் இருந்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு புஜாரா பொறுத்தது போது பொங்கி எழு புஜாரா என்று அடில் ரஷீத் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்து தொடரில் தனது 2-வது சதத்தையும், தொடர்ச்சியாக 3-வது சதத்தையும் அடித்தார். சிறிது நேரம் கழித்து விராட் கோலி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை ஆஃப் திசையில் 2 ரன்களுக்குத் தட்டி விட்டு தனது சதத்தை நிறைவு செய்தார்.

இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்காக 226 ரன்களைச் சேர்த்தனர்.

204 பந்துகளில் 12 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்த புஜாரா ஆண்டர்சன் பந்தை தேவையில்லாமல் ஆடி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடர்ச்சியாக 3-வது சதம் எடுத்துள்ளார் புஜாரா.

விராட் கோலி சதம் எடுத்த பிறகும் நிதானத்துடன் ஆடினார், அவர் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார், 2-வது இன்னிங்ஸ் ஆட முடியாத ஒரு ஸ்கோரை எட்டி விட வேண்டும் என்பதே அது. ஆனால் அவரது இந்தக் குறிக்கோளுக்கு பின்னடைவு ஏற்படுத்துமாறு அஜிங்கிய ரஹானே தேவையில்லாமல் ஆண்டர்சன் பந்தை ஆடி அவுட் ஆனார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்றைய தினத்தின் சிறந்த வீச்சாளர் அவர் 16 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஸ்டோக்ஸ் கோலியை காலி செய்திருக்க வேண்டும் ரஷீத் கேட்ச் விட்டார்.

பிட்ச் நாளை உணவு இடைவேளைக்குப் பிறகு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தப் பிட்ச் ராஜ்கோட் பிட்சை விடவும் மெதுவாகவே உள்ளது, எனவே ஸ்பின்னர்களுக்குப் பந்து திரும்பினாலும் மெதுவாகவே திரும்பலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x