Published : 25 Oct 2022 12:07 PM
Last Updated : 25 Oct 2022 12:07 PM
மெல்போர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தச் சூழலில் இரு நாட்டு அணியின் பெண் ரசிகர்கள் இணைந்து போட்டோவுக்கு முகமலர்ச்சியுடன் உற்சாக போஸ் கொடுத்துள்ளனர். அது சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சுமார் 90,293 ரசிகர்களுக்கு முன்னிலையில் இரு அணிகளும் இந்த போட்டியில் பலப்பரீட்சை செய்தன. அதில் இந்திய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர் விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களை விளாசி இருந்தார். அவரது ஆட்டத்தை கிரிக்கெட் வல்லுனர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் உச்சி முகர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளின் ஜெர்சிகளை அணிந்த இரு நாட்டு பெண் ரசிகர்கள் இணைந்து போட்டோ ஒன்றுக்கு போஸ் கொடுத்துள்ளனர். அது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது. அநேகமாக இந்தப் படம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட படம் என்று நம்பப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் பூகோள ரீதியாக அக்கம்பக்கத்து நாடுகளாக இருந்தாலும் அரசியல் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் வேறுபட்டு நிற்கின்றன. அதன் காரணமாக இரு நாடுகளும் விளையாட்டு களத்தில் மோதும் போது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அதுவும் கிரிக்கெட் என்றால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில், ‘கிரிக்கெட் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைந்த ரசிகர்கள்’ என இந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் அனைத்தையும் மறந்து இணைய வேண்டும், இதுதான் கிரிக்கெட்டின் அழகு, நம்மை பிரித்தது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்தான், இரு நாட்டு ரசிகர்களும் பெற்றுள்ள பக்குவத்தின் வெளிப்பாடு என இந்த போட்டோவவுக்கு கமெண்ட் குவிந்துள்ளது. சிலர் அரசியல் ரீதியாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT