Published : 23 Oct 2022 07:18 PM
Last Updated : 23 Oct 2022 07:18 PM
மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டி அதன் அனைத்து ஹைப் மற்றும் ஊதிப்பெருக்கலையும் தாண்டி ஒரு மிகப்பரபரப்பான போட்டியாக அமைந்து. தீபாவளி நன்னாளுக்கு முதல் நாள் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றி என்பது பண்டிகைக் கொண்டாட்டத்தை விடவும் பெரிய கொண்டாட்டமாக அமைந்து விட்டது.
18-வது ஓவரில் ஷாஹின் அஃப்ரீடியை சாத்தி எடுத்தது முதல் சினிமா கிளைமாக்ஸ் ஆன கடைசி ஓவர் வரை: 17-வது ஓவர் முடிவில் இந்திய அணி 112/4 என்று தோல்வி முகமே காட்டியது. 3 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றிக்குத் தேவை. ஒரு ஓவருக்கு 16 ரன்கள் என்பது பெரிய டார்கெட். ஷாஹின் ஷா அஃப்ரீடி, ராவுஃப் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வீசவிருக்கின்றனர். அப்போது கோலி 42 பந்துகளி 46 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 32 பந்துகளில், 1 பௌண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இதற்கு முன்பாக வந்த ஒரே பெரிய ஓவர் முகமது நவாஸ் என்ற இடது கை ஸ்பின்னர் வீசிய ஓவர்தான். எப்படி நம் அக்சர் படேலின் லாலி பாப் பவுலிங்கை பாகிஸ்தானின் இப்திகார் 3 பெரிய சிக்சர்கள் விளாசி 21 ரன்கள் எடுத்து பாகிஸ்தானின் வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டாரோ, அதே போல் 12-வது ஓவரை நவாஸ் வீச, ஹர்திக் 2 சிக்சர்களையும் கோலி ஒரு சிக்சரையும் விளாசி 20 ரன்களை எடுத்தனர்.
அந்த ஓவர் ஒன்றுதான் அதிக ரன்கள் வந்த ஒரே ஓவர். இந்நிலையில்தான் 3 ஓவர்களில் 48 என்ற நிலையில் கோலியும், ஹர்திக் பாண்டியாவும், என்ன செய்வார்களோ என்று அனைவருக்கும் நடுக்கமாகவே இருந்திருக்கும். ஆனால் பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்றே பலரும் நினைத்திருப்பார்கள்.
ஆனால், ஷாஹின் ஷா அப்ரீடி வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தை கோலி பேய் புல் ஷாட் ஆட பந்து ஏறக்குறைய சிக்சருக்குச் சென்றிருக்கும். ஆனால் ஒரு பவுன்ஸ் பவுண்டரி சென்றது. அஃப்ரீடி டென்ஷனில் அடுத்த பந்தை வைடாக வீசினார். அடுத்த பந்தை டீப் கவரில் 2 ரன்களுக்கு விரட்டினார் விராட். அடுத்த பந்து மீண்டும் ஒரு தாழ்வான புல்டாஸை எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடித்தார் அருமையான பிளேஸ்மெண்ட், பந்து பவுண்டரி. கடைசி பந்தை மிக அருமையாக பைன்லெக்கில் சூரியகுமார் யாதவ் போல ஒரு ஷாட் அடித்தார் பவுண்டரி அந்த ஓவரில் 17 ரன்கள். 18 ஓவர் 129/4.
அடுத்த ஓவர் ஹாரிஸ் ராவுஃப் வந்தார், இவர் அதுவரை பயங்கரமாக வீசி வந்தார், அடிக்கவே முடியவில்லை. ஆனால், 19-வது ஓவரின் 5-வது மற்றும் 6-வது பந்துகளில் விராட் கோலி அடித்த 2 சிக்சர்களில் ஒன்று பிளைண்டர் என்பார்களே அதுதான். காரணம் ஸ்டம்பு உயரத்துக்கும் சற்று கூடுதல் உயரத்தில் வந்த நேர் பந்தை மட்டையை நேராகப் பிடித்த வண்ணமே ஒரு செந்தூக்குத் தூக்கினார் நேராக சிக்ஸ்! நம்ப முடியாத ஷாட். அற்புதத்தின் உச்சம்! கடைசி பந்து மீண்டும் ஒரு சூரியகுமார் ரக ஆஃப் திசையில் லேசாக் ஒதுங்கிக் கொண்டு லெக் ஸ்டம்பில் வந்த பந்தை அப்படியே ஃபைன்லெக்கில் தூக்கினார் சிக்ஸ். 19 ஓவர் 144/4.
எல்லோருக்கும் ஓவர் முடிந்து விட்டது, இடது கை ஸ்பின்னர் முகமது நவாஸுக்கு மட்டுமே ஒரே ஓவர் மீதமிருக்கிறது. அவரிடம் கொடுத்தார். 16 ரன்கள் தேவை, ஹர்திக் முடித்து விடுவார் என்றே எதிர்பார்த்தோம், ஆனால் அவர் ஸ்லாக் செய்து கொடியேற்றி விட்டு அவுட் ஆகிச் சென்றார். ஆனால் 37 பந்தில் 40 என்று வெற்றிக்கூட்டணியில் பங்களிப்பு செய்து வெளியேறினார். நவாஸ் கார்த்திக்குக்கு வீசினார் நெஞ்சுயரம் வந்தது ஃபுல்டாஸ் பந்து. ஆனால் நோ-பால் இல்லை. ஏனெனில் இவர் மேலேறி வந்திருந்தார், நார்மல் பொசிஷனில் இருந்தால்தான் அது நோ-பால். ஃப்ரீ ஹிட் எல்லாம்.
ஆனால் அதே போல் கோலி இறங்கி வந்து அதே போன்ற புல்டாஸை தூக்கி பிரமாதமாக ஸ்கொயர்லெக்கில் சிக்சர் விளாசினார். அதுவும் கோலி, 'டவுன் த ட்ராக்' வந்த பிறகுதான் இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸ். ஆனால் கோலி நோ-பால் என்று கோரினார். நடுவர் நோ-பால் என்று கூறி ஃப்ரீஹிட் கொடுத்தார். இது சர்ச்சையாகலாம், ஆனால் அதனாலெல்லாம் இந்தியா வென்று விடவில்லை, ஏனெனில் எப்படியிருந்தாலும் அந்தப் பந்து சிக்ஸ். ஃப்ரீ ஹிட் பந்தை வைடாக வீசினார் நவாஸ், ஒரு ரன். அடுத்த பந்து ஃப்ரீ ஹிட். ஆனால் கோலி போல்டு ஆனார். ரிஸ்வான் பந்தை சேகரிக்கத் தவற பந்து தேர்ட்மேனுக்குச் செல்ல 3 ரன்களை ஓடி எடுத்தனர்.
அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் ஸ்டம்ப்டு ஆனார். கடைசி பந்தில் அஸ்வின் கடும் டென்ஷனில் இறங்கினார். ஒரு பந்து 2 ரன் தேவை. அஸ்வின் என்ன செய்யப்போகிறார்? அனைத்து பீல்டர்களும் அருகில் ஒரு ரன் எடுப்பது கடினம். பிக் ஷாட் ஆடி 2 எடுக்கவே பார்ப்பார்கள் அப்படி எடுக்கும் போது கேட்ச் ஆகிவிட்டால் தோல்விதான், ஆனால் அப்போதுதான் அஸ்வின் எப்படியும் லெக் திசையில் ஒதுங்கிக்கொண்டு ஆஃப் திசையில் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பில் நவாஸ் ஒரு பந்தை பிளாட்டாக வேகமாக லெக் ஸ்டம்புக்கு வெளியே வீச அஸ்வின் மிக மிக புத்திசாலித்தனமாக அதை ஆடாமல் விட்டார், பந்து வைடு, ஆட்டம் டை ஆனது.
அடுத்த பந்தில் அஸ்வின் அதே போல் ஒதுங்கி கொண்டு மிட் ஆஃபுக்கு மேல் கூலாக தூக்கினார் இந்தியா அற்புதமான வெற்றி, நம்ப முடியாத வெற்றி, மறக்க முடியாத வெற்றி. விரட்டல் மன்னன் விராட் கோலி 52 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82 நாட் அவுட். மொஹாலியிலும் இப்படிப்பட்ட ஒரு இன்னிங்ஸை ஆடித்தான் வெற்றி பெற்றுக் கொடுத்தார் விராட் கோலி.
முன்னதாக... பயந்து பயந்து ஆடி விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி: 160 ரன்கள் என்ற இலக்கு இந்த மைதானத்தில் கிரீன் டாப் பிட்சில் கடினமே என்று ஏற்கெனவே பிட்ச் ரிப்போர்ட்டில் மைக்கேல் கிளார்க் தெரிவித்து விட்டார். டாஸ் வென்று பேட்டிங் செய்ய வேண்டிய பிட்ச் என்றார். ஆனால் ரோஹித் சர்மா பீல்டிங்கைத் தேர்வு செய்து அதிர்ச்சியளித்தார். பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து மோசமாகத் தொடங்கி கடைசியில் அதிரடி காட்டி 159 ரன்கள் எடுத்தனர்.
இப்திகார் 34 பந்துகளில் அக்சர் படேலை அடித்த ஒரே ஓவர் 3 சிக்சர்களுடன் மொத்தம் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 51 எடுக்க, அதிர்ஷ்டக்கார ஷான் மசூத் 42 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். கடைசியில் தேவையில்லாமல் ஷாஹின் அஃப்ரீடியை 8 பந்தில் 16 ரன்கள் அடிக்க விட்டனர். இதனால் 160 ரன்களை எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் ஷாஹின் அஃப்ரீடியிடம் அடி வாங்கியது போக மற்றபடி அருமையாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதில் பாபர் அசாமை டக் அவுட்டாக்கி எல்.பி.யில் வீழ்த்தியது பாகிஸ்தானுக்கு பேரதிர்ச்சி அதோடு ரிஸ்வானை பவுன்சர் வீசி கேட்ச் ஆக்கி வெளியேற்றினார். இப்திகார் அகமடை முகமது ஷமி அற்புதமான ஸ்கிட்டர் பந்தில் எல்.பி. செய்து வெளியேற்ற, ஹர்திக் பாண்டியா இடையில் ஷதாப் கான்(5), ஹைதர் அலி (2), முகமது நவாஸ் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றி முக்கியமான மிடில் ஆர்டர் முதுகெலும்பை உடைத்தார். 159/8 என்ற ரன் எண்ணிக்கை இந்தப் பிட்சில் கடினமே.
பயந்து பயந்து தொடங்கிய இந்திய வீரர்கள்: 160 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆக்ரோஷமாக பாசிட்டிவ் ஆக ஆடுவதை விடுத்து ஷாஹின் அஃப்ரீடியின் புல்டாஸ்களைக் கூட தடுத்தாடி ராகுலும், ரோஹித் சர்மாவும் கடும் பயத்தில் ஆடியது தெரிந்தது. இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்த உலகக்கோப்பைக்கு முன்னால் இந்திய அணி பற்றி சொன்னதை ரோஹித்தும் ராகுலும் நிரூபித்தனர். ''இந்திய அணி இருதரப்பு தொடர்களிலெல்லாம் வீரமாக ஆடுகின்றனர். ஆனால் ஐசிசி தொடர் என்று வந்து விட்டால் கோழைகளாகி விடுகின்றனர்'' என்றார். ரோஹித்து, ராகுலும் அப்படித்தான் ஆடினர்.
ராகுல் 4 ரன்களில் நசீம் ஷாவின் 142 கிமீ வேக இன் கட்டர் பந்துக்கு பின்னால் சென்று ஆடுவதை விடுத்து அரைகுறையாக முன் காலை போட்டு தேர்ட்மேனில் ஸ்டியர் செய்கிறேன் பேர்வழி என்று இன்சைடு எட்ஜ் ஆக்கி, பேடில் வாங்கி பவுல்டு ஆனார். ரோஹித் சர்மாவும் 4 ரன்களில் ஹாரிஸ் ராவுஃப் பந்தை கால்களை நகர்த்தாமல் நின்ற இடத்திலிருந்தே பதற்றத்துடன் மட்டையை பந்தின் மீது தொங்க விட எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். ஷாஹின் அஃப்ரீடியின் யார்க்கருக்குப் பயந்து கால்களை நகர்த்தாமல் ஆடியதைப் பார்த்த ராவுஃப் அருமையாக ஆஃப் ஸ்டம்பில் 145 கிமீ வேகத்தில் ஒரு பந்தை சற்றே எழுப்ப ரோஹித் காலியானார்.
சூரியகுமார் யாதவ்வும் வந்தவுடன் பயமில்லாமல் 2 பவுண்டரிகளை ஆடி அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் நீடிக்கவில்லை. இவரும் ஹாரிஸ் ராவுஃப் வீசிய ஷார்ட் ஆஃப் லெந்த் எகிறு பந்தை ஒன்று இரண்டு கால்களையும் தூக்கி தரையோடு தடுத்தாடியிருக்க வேண்டும் அல்லது அந்தப் பந்துக்கு மட்டையைக் கொண்டு செல்லாமல் கீழே இறக்கியிருந்தால் அது தானாக ரிஸ்வானிடம் போயிருக்கும், ஆனால் அவர் அதைப்போய் அனாவசியமாகச் சீண்டி எட்ஜ் ஆகி ரிஸ்வான் கேட்சுக்கு வெளியேறினார்.
ஒரு இடது கை வீரர் டாப் ஆர்டரில் ஆஸ்திரேலிய பிட்ச்களில் உதவிகரமாக இருக்கும் என்று தெரிந்திருந்தும் ரிஷப் பண்ட்டை எடுக்காமல் அக்சர் படேலை அணியில் எடுத்து மூக்குடை பட்டார் ரோஹித் சர்மா. அவர் ஒரு ஓவரில் 21 ரன்களை கொடுத்தார். பேட்டிங்கில் இறங்கி 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஆனால் அவர் ரன் அவுட்டுக்கு கோலி ஒரு விதத்தில் காரணம், ஓடி வந்து இவரை இழுத்து விட்டுவிட்டு வேண்டாம் என்று கூறிவிட்டார்.
திரும்பி ரீச் ஆக முடியவில்லை. 31/4 என்ற நிலையிலிருந்து ஹர்திக் பாண்டியாவும் விராட் கோலியும் ஒரு ஜென் பவுத்த மனநிலையில் ஸ்கோரை மெல்ல மெல்ல கொண்டு சென்று 111 ரன்களை இருவரும் 13 ஓவர்களில் சேர்த்தனர். 19.1 ஓவரில்தான் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். ஆனால் விரட்டல் மன்னன் விராட் கோலி 18வது ஷாஹின் அஃப்ரீடி ஓவர், 19வது ஹாரிஸ் ராவுப் ஓவர்களை சொல்லி வைத்துப் பதம் பார்க்க விராட் கோலி மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸை ஆடி பாகிஸ்தானுக்கு எதிராக நீண்ட காலம் மறக்கமுடியாத ஒரு வெற்றியைப் பெற்றுத்தந்தார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT