Published : 22 Oct 2022 11:38 PM
Last Updated : 22 Oct 2022 11:38 PM

'பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால்?..' - ரோகித் சர்மா ஓபன் டாக்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் நாளை பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் போட்டியும் கூட. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. அதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.

வானிலை மைய ஆய்வின்படி, போட்டி நடைபெற உள்ள மெல்பேர்ன் நகரில் நாளை 80 சதவீதம் மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை அச்சுறுத்தல் இருந்தாலும் வழக்கம் போலவே இந்தப் போட்டிக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் புரோமோக்களும் வலம் வந்து கொண்டுள்ளன. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதி உள்ளன. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்த கடைசி 3 டி20 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது பாகிஸ்தான்.

நாளைய ஆட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் பாகிஸ்தான் உடனான போட்டி அழுத்தமாக உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், "அழுத்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை. ஏனென்றால், அழுத்தம் என்றும் மாறப்போவதில்லை. இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். இதை சவால் என்றே சொல்ல விரும்புகிறேன். தற்போதுள்ள பாகிஸ்தான் அணி மிகவும் சவாலான அணி. இப்போது மட்டுமல்ல, 2007 முதல் 2022 வரை நான் விளையாடிய அனைத்து பாகிஸ்தான் அணிகளும் நல்ல அணிதான்.

ஆனால், போட்டி நடைபெறும் குறிப்பிட்ட நாளே முக்கியம். குறிப்பிட்ட நாளில், நீங்கள் நன்றாக செயல்பட்டால், எந்த எதிரணியையும் வீழ்த்த முடியும். கடந்த பல வருடங்களாக அதுதான் நடந்தது. கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது. எங்களை ஜெயித்தார்கள். ஆசிய கோப்பையில் இரு அணிகளுமே சிறப்பாக விளையாடினோம். தலா ஒரு போட்டியில் இருவருமே வென்றோம்.

பாகிஸ்தான் சமீப காலமாக நல்ல விளையாட்டை வெளிப்படுத்திவருகிறது. அவர்களின் கிரிக்கெட் பிராண்ட் உங்களுக்குத் தெரியும். அதிர்ஷ்டவசமாக, இரண்டு முறை ஆசிய கோப்பை அந்த அணிக்கு எதிராக விளையாடினோம். அவர்கள் எந்த மாதிரியான மனநிலையுடன் விளையாடுகிறார்கள் என்பதைக் கணக்கிடுவது மிகவும் கடினம், மேலும் நாங்கள் ஆசியக் கோப்பையில் விளையாடிய அந்த இரண்டு ஆட்டங்களிலும், அவர்களின் அணியிலும் எங்கள் அணியிலும் சில வீரர்கள் உலககோப்பை தொடரில் இல்லை. எனவே அவர்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. உலகக் கோப்பையின் தகுதி சுற்று போட்டிகள் அதை நிரூபித்துள்ளன. எனவே அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை அழுத்தம் இல்லாமல், விஷயங்களை எளிதாக எடுத்துக்கொண்டு விளையாடினால் போதும். ஒன்பது ஆண்டுகளாக நாங்கள் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. . நிச்சயமாக, இது எங்கள் வீரர்களின் மனதில் உள்ளது. ஆனால் அதை ஒதுக்கிவைத்து விட்டு தற்போதையை வேலையில் கவனம் செலுத்துவது முக்கியம், ஏனென்றால் நீங்கள் கடந்த காலத்தை அதிகமாக நினைத்தால் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த முடியாது. நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்" என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x