Published : 22 Oct 2022 09:04 PM
Last Updated : 22 Oct 2022 09:04 PM

T20 WC அலசல் | அதிரடி இங்கிலாந்தை அடக்கி அச்சுறுத்திய ஆப்கன் அணிக்கே ‘தார்மிக’ வெற்றி!

பெர்த்தில் சனிக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானை 112 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இங்கிலாந்து, பிறகு அந்த ஸ்கோரை எடுக்க திக்கித் திணறி 18.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து போராடி வென்றது. ஆனால், இங்கிலாந்தின் ஃபீல்டிங் மிகப் பெரிய தாவலை மேற்கொண்டுள்ளது, அதியற்புதமான ஃபீல்டிங்கினால் இங்கிலாந்து இந்த உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணி ஒருவேளை 130 ரன்களை எடுத்திருந்தால் இங்கிலாந்து பாடு திண்டாட்டமாகியிருந்தாலும் இருக்கலாம். பிட்ச் வேகப் பந்துவீச்சு பிட்ச். இதனால் இத்தகைய பிட்ச்களில் ஆடிப் பழக்கமில்லாத ஆப்கானிஸ்தான் அணி குறைந்த ஸ்கோரை எடுத்தது ஆச்சரியமில்ல. ஆனால் வெறும் 113 ரன்கள் இலக்கை வைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் அணி ஆடிய ஆட்டம், வீசிய பந்து வீச்சு உண்மையில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் இங்கிலாந்து வீரர்களுக்கு திருப்திகரமான வெற்றியாக இல்லை என்பதை உணர்த்தியிருக்கும். இங்கிலாந்து தன் வழக்கமான காட்டடி தர்பாரை நடத்த முடியவில்லை.

இங்கிலாந்தின் மிடில் ஆர்டர் சரிவு, அவர்களின் பலவீனங்களை அவர்களுக்கே காட்டியிருக்கும். இதற்கு அவர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கே நன்றி சொல்ல வேண்டும். டாஸ் வென்ற ஜாஸ் பட்லர் முதலில் ஆப்கன் அணியை பேட் செய்ய அழைத்தார்.

இத்தகைய பவுன்ஸ் பிட்ச்களில் பாவம், ஆப்கன் வீரர்கள் ஆடிப் பழக்கமில்லை. ஆனால் ரஹமனுல்லா குர்பாஸ் ஓர் அதிரடி வீரர். அதற்கேற்ப அவர் கிறிஸ் வோக்ஸ் பந்து ஒன்றை ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து கொண்டு மண்டிப்போட்டு பைன் லெக்கில் தூக்கி விட்டு அடித்த சிக்ஸ் நம் ஆர்வத்தைத் தூண்டும் ஷாட். ஆனால், இவர் 8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் உட் 146 கிமீ வேகப்பந்து ஒன்று உள்ளே வர தடுத்தாட நினைத்தார், எட்ஜ் ஆகி வெளியேறினார். மறுமுனையில் ஹஸ்ரத்துல்லா சசாய்க்கும் ஒன்றும் மாட்டவில்லை. ஆனால், இப்ராஹிம் சத்ரான், மார்க் உட் பவுன்சரை ஹூக் செய்து சிக்சருக்கு அனுப்பினார். சத்ரான் மேலும் 2 பவுண்டரிகளை விளாச, 6-வது ஓவர் முடிவில் ஆப்கன் அணி ஓரளவுக்கு சுமாரான 35/1 என்று இருந்தது.

அப்போது ஹஸ்ரத் சசாய் 17 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்தில் லிவிங்ஸ்டனின் பிரமிப்பூட்டும் கேட்சுக்கு வெளியேறினார். ஆப்கனின் டாப் ஸ்கோரர் இப்ராஹிம் சத்ரான் 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்தை அடிக்கப்போய் மொயீன் அலியிடம் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆகி வெளியேறினார். நஜ்புல்லா சத்ரான் 13 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் ஆதில் ரஷீத் லாங் ஆனில் அருமையான கேட்சை எடுக்க வெளியேறினார். ஆப்கன் கேப்டன் முகம்து நபி 3 ரன்களை மட்டுமே எடுத்து மார்க் உட்டின் அதிவேக எகிறு பந்திற்கு பட்லரின் அபாரமான இடது கை டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

பிறகு சாம் கரன் பின்வரிசை ஆப்கன் வீரர்களை வரிசையாக வீட்டுக்கு அனுப்பினார். ஆப்கனின் இன்னொரு வீரர் நன்றாக ஆடினால் என்றால், அவர் உஸ்மான் கனி ஆவார். இவர் 30 பந்துகளில் 30 ரன்களை எடுத்து சாம் கரனிடம் வீழ்ந்தார். அஸ்மத்துல்லா ஓமர்சாய் (8) விக்கெட்டை வீழ்த்தியவுடன் அடுத்த பந்தே ரஷீத் கானை கோல்டன் டக் அவுட் செய்தார் சாம் கரன். இதன் மூலம் ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார். ஆனால், ஹாட்ரிக் எடுக்க முடியவில்லை. ஃபசல் ஹக் ஃபரூக்கியை வீழ்த்திய கரன் 3.4 ஓவர் 10 ரன் 5 விக்கெட் என்று டி20 கிரிக்கெட்டில் முதன் முதலில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 19.4 ஓவர்களில் ஆப்கான் அணி 112 ரன்களுக்குச் சுருண்டது.

இங்கிலாந்து இந்த இலக்கை உண்மையில் எதிர்பார்ப்பின்படி 10 ஓவர்களில் அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், ஆப்கன் வீரர்கள் அட்டகாசமாக வீசினர். 16வது ஓவரில் இங்கிலாந்து 97/5 என்று குறுக்கப்பட்டது. பசல்ஹுக் பரூக்கி பந்தை ஹை பிளிக் செய்தார் பட்லர் (18) டீப்பில் முஜிபுர் ரஹ்மானிடம் கேட்ச் ஆனார். அலெக்ஸ் ஹேல்ஸ் 19 ரன்களில் புல் ஷாட்டில் ஃபரீத் அகமது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் வெறும் 2 ரன்களில் ஆப்கான் கேப்டன் முகமது நபியின் ரவுண்ட் த விக்கெட் ஆர்ம் பாலுக்கு இறங்கி வந்து ஆட முற்பட்டு ஸ்டம்பை இழந்து பவுல்டு ஆகி வெளியேறினார். 10.4 ஓவர்களில் அதிரடி இங்கிலாந்து 65/3 என்று திண்டாடியது. டேவிட் மலான் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் 30 பந்துகளில் திக்கித் திணறி 18 ரன்கள் எடுத்து முஜிப் உர் ரஹ்மான் சுழலுக்கு கேப்டன் முகமது நபியின் அற்புதமான முழு டைவிங் கேட்சுக்கு அவுட் ஆன போது ஏதோ ஓர் அதிர்ச்சி இன்று காத்திருக்கிறது என்ற எண்ணமே ஏற்பட்டது. அதிரடி வீரர் ஹாரி புரூக் 7 ரன்களில் ரஷீத் கானை அடிக்கிறேன் பேர் வழி என்று கொடியேற்றி அவுட் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து 15.2 ஓவர்களில் 97/5 என்று சற்றே நடுக்கத்துடன் ஆடியது.

ஆனால், பதற்றத்துடனேயே லிவிங்ஸ்டன் 29 ரன்களை எடுக்க மொயின் அலி 8 ரன்களை எடுக்க இன்னும் 11 பந்துகளே மீதமிருக்க இங்கிலாந்து இலக்கை எட்டி வென்றது. அதுவும் வைடு பந்தில் வென்றது. பட்லர் ஆட்டம் முடிந்து கூறும்போது ‘எங்களுக்கு சவால் அளித்தது ஆப்கானிஸ்தான், அந்த அணிக்கு முழுப் பாராட்டுகள்’ என்றார். முகமது நபி, ஆஸ்திரேலியா பிக்பாஷ் லீகில் முஜிபுர் ரஹ்மானும், ரஷீத் கானும் ஆடி அனுபவம் பெற்றதைக் குறிப்பிட்டார்.

இன்று நடந்த முதல் போட்டியில் எந்த ஒரு சவாலும் அளிக்காமல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் சரணடைய, குறைந்த ரன் போட்டியாக இருந்தாலும் ஆப்கன் அணியானது இங்கிலாந்தை தண்ணி குடிக்க வைத்ததால் ஆப்கனுக்கே தார்மிக வெற்றி என்றுதான் கூறத் தோன்றுகிறது. ஆப்கனை சும்மாவெல்லாம் நெட்டித் தள்ளி விட முடியாது என்பதை அந்த வீரர்கள் தங்களது அற்புதமான போராட்டக் குணத்தினால் இன்று அறிவுறுத்தியுள்ளார்கள். மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கைதான். ஏனெனில் இன்று ஒருவேளை 130 ரன்களை ஆப்கன் எடுத்திருந்தால் இங்கிலாந்து கதி அதோகதியாகக் கூட ஆகியிருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x