Published : 22 Oct 2022 08:02 AM
Last Updated : 22 Oct 2022 08:02 AM
பெர்த்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் இன்று மாலை 4.30 மணிக்கு பெர்த் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த ஜூன் மாதம் இயன் மோர்கன், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய கேப்டனாக ஜாஸ் பட்லர் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி 20 தொடரை இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி வென்றது. இந்த இரு தொடர்களிலும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை வேட்டையாடினர். அதேபோன்று மீண்டும் ஒரு முறை ரன் வேட்டைக்காக தயாராக உள்ளனர் 2010-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணியினர்.
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்லே காயம் காரணமாக விலகியதை தொடர்ந்துதைமால் மில்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங்கில் ஜாஸ் பட்லர், டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் மார்க் வுட், டேவிட் வில்லி, சேம் கரண் கூட்டணி நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறும்போது, “நாங்கள் நல்ல இடத்தில் இருக்கிறோம். கடந்த 10 ஆட்டங்களில் நாங்கள் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தினோம். நாங்கள் ஒரு ஆபத்தான அணிஎன்றே நினைக்கிறேன், பல திறமையான வீரர்கள் எங்களிடம் உள்ளனர், அவர்கள் தனியாகவே ஆட்டங்களை வென்று கொடுக்க முடியும். இது டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய விஷயம். இங்கிலாந்து அணிக்கு இது புதிய சகாப்தம்.
பின்னோக்கிப் பார்ப்பதில் அதிக ஆற்றலைச் செலவிட வேண்டாம் என கருதுகிறோம். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் பேசும் விதமாக முன்னோக்கிச் செல்லும் குழுவாக இருப்பது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். டி 20 கிரிக்கெட் போட்டியே இரக்கமற்றது. ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இவ்வாறு ஜாஸ் பட்லர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT