Published : 20 Oct 2022 04:34 PM
Last Updated : 20 Oct 2022 04:34 PM

T20 WC அலசல் | குசால் மெண்டிஸ் இன்னிங்ஸால் பிழைத்த இலங்கை... கத்துக்குட்டி அல்ல என்று நிரூபித்த நெதர்லாந்து!

இலங்கை - நெதர்லாந்து போட்டி.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை முதல் சுற்றுப் போட்டிகளில் இன்று குரூப் ஏ-யில் முக்கியமான போட்டியில் இலங்கை அணி போராடி நெதர்லாந்தை வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்குத் தகுதி பெற்றாலும், இலங்கையை நெதர்லாந்து அணி தண்ணி குடிக்க வைத்தது என்றால் அது மிகையாகாது.

இந்தத் தோல்வியினால் நெதர்லாந்து தன் 3 போட்டிகளில் 2-ல் வென்று 4 புள்ளிகளைப் பெற்றாலும், நெட் ரன் ரேட் மைனஸ் 0.162 குறைந்ததால் 2ம் இடத்தில் உள்ளது. இருந்தாலும் பிளஸ் 1.28 என்ற நெட் ரன் ரேட் வைத்துள்ள நமீபியா அணி, இன்றைய தினத்தின் அடுத்த போட்டியான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக வெற்றி பெற்றாலே போதும் சூப்பர்-12 சுற்றுக்குத் தகுதி பெறும்.

அற்புதமாக ஆடி தாங்கள் ஒன்றும் கத்துக்குட்டி அணி அல்ல என நிரூபித்த நெதர்லாந்து பரிதாபமாக வெளியேற நேரிடும். யுஏஇ வென்று விட்டால் நெதர்லாந்து சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும்.

இன்று ஜீலாங் மைதானத்தில் நடைபெற்ற குரூப் ஏ ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி மிகச்சரியாக முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. ஏனெனில் இந்த மைதானத்தில் சைடு பவுண்டரிகள் வெறும் 58 மீ தான். லாங் ஆன், லாங் ஆஃப் பவுண்டரிகள் 82 மீ தூரம். அந்த ஷார்ட் பவுண்டரியை பயன்படுத்தி சிக்சர்கள், பவுண்டரி விளாசினாலே போதும் 160-165 ரன்கள் இருந்தால் வெற்றி சாத்தியமே. இதைத்தான் இலங்கை அணி சரியாகச் செய்தது. குறிப்பாக குசால் மெண்டிஸ் 20வது ஓவர் வரை நின்றார். அவர் 44 பந்துகளில் 79 ரன்களை 5 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் விளாசினார்.

குசால் மெண்டிஸ் அடித்த 5 சிக்சர்களும் ஷார்ட் ஸ்கொயர் பவுண்டரிகளில் வந்ததே. அவரது ஒரு சில நான்குகளும் அந்த ஷார்ட் பவுண்டரியில் வந்ததே. பவர் ப்ளே வரை நெதர்லாந்து பவுலிங்கை தொட முடியவில்லை. காரணம் அந்த அணி சிறப்பாக பந்து வீசி இறந்தது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இருக்கும் பவுன்ஸை பயன்படுத்தியது. அதே போல் ஸ்பின்னர்களுக்குப் பந்து நின்று திரும்பியது. பிட்ச் ஸ்லோதான். அதுவும் இலங்கை அணியின் மந்தமான தொடக்கத்துக்கு காரணம்.

குறிப்பாக டிம் பிரிங்கிள் என்ற உயரமான இடது கை ஸ்பின்னர் அந்தக் கால இங்கிலாந்து ஸ்பின்னர்களான பில் எட்மண்ட்ஸ், ஆஷ்லி ஜைல்ஸை நினைவூட்டும் வகையில் பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினார்.

இலங்கைக்கு அதிர்ஷ்டம் நிறைய இருந்தது, காரணம், சில கேட்ச்கள் 30 யார்டு சர்க்கிளுக்குள் பீல்டர் கைகளுக்குச் செல்லாமல் சற்று முன்னே விழுந்தது. குசால் மெண்டிஸ் அதில் ஒருவர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிளாசன், இடது கை ஸ்பின்னர் டிம் பிரிங்கிள், மற்றொரு ஸ்பின்னரான வாண்டர் மெர்வ், வேகப்பந்து வீச்சாளர் பால் ஆன் மெக்கரன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி, பவர் ப்ளேயில் இலங்கையைக் கட்டுப்படுத்தினர். 6 ஓவர்களில் 36/0 என்று இலங்கை ரன் எடுக்கத் திணறியது.

அதிவேக பவுலர் மெக்கரனின் 2 அற்புத பந்துகள்... ஹாட்ரிக் வாய்ப்பு நழுவல்! - 7வது ஓவரை வீச வந்த மெக்கரன் மணிக்கு 145-146 கிமீ வேகத்தில் வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். நிசாங்காவின் ஸ்டம்புகளை தாகர்த்தார். அடுத்த பந்தே தனஞ்ஜயாவுக்கு ஒரு யார்க்கர் வீசினார். எல்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் ஒருவேளை அவர் ரிவியூ செய்திருந்தால் நாட் அவுட்டாகியிருக்கும். அவர் ரிவியூ செய்யாமலே போய்விட்டார். மெக்கரன் ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார், ஆனால் அடுத்த பந்து விக்கெட் விழவில்லை, ஹாட்ரிக் வாய்ப்பு நழுவியது.

2 விக்கெட்டுகள் மூலம் நெதர்லாந்து கை ஓங்கினாலும் அந்த 7வது ஓவர் முதல் 15வது ஓவர் வரையிலான 9 ஓவர்களில் இலங்கை அணி 73 ரன்கள், அதாவது ஓவருக்கு 8 ரன்களுக்குச் சற்று கூடுதலான வீதத்தில் ரன் எடுத்தது. அதாவது இலங்கை 6 ஓவர்களில் 36/0 பிறகு 15வது ஓவர் முடிவில் 109/3. குசால் மெண்டிஸ் அருமையான ஸ்வீப் ஷாட்கள் மூலம் சுழற்பந்து வீச்சாளர்களை அட்டாக் செய்தார். சிக்ஸர் விளாசி அரைசதம் எடுத்தார். மொத்தம் 44 பந்துகளில், 79 ரன்களை விளாச, அவருக்கு உறுதுணையாக அசலங்கா 31 மற்றும் பனுகா ராஜபக்ச 19 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 162/6 என்ற ஒரு நல்ல இலக்கை இலங்கை அணியால் எடுக்க முடிந்தது.

கடைசி 5 ஓவர்களில் 53 ரன்களை இலங்கை எடுத்ததற்குக் காரணம் குசால் மெண்டிஸ் கடைசி வரை நின்றதுதான். இவரை முதலில் காலி செய்திருந்தால் இலங்கை அணி இன்று அம்போவாகியிருக்கும். 145-150 என்றுதான் இலங்கை அணி எடுத்திருக்க வேண்டும், ஆனால் குசால் மெண்டிஸ் விளாசலால் இந்த ரன் எண்ணிக்கையை எட்ட முடிந்தது. நெதர்லாந்தின் பாஸ் டி லீடா, பிரெட் கிளாசன், வான் டெர் கக்டன் ஆகியோர் தங்களது 10 ஓவர்களில் 96 ரன்களை வாரி வழங்கியதே நெதர்லாந்தின் தோல்விக்குக் காரணம்.

இலங்கையை கதறவிட்ட நெதர்லாந்தின் ‘தோனி’ - மேக்ஸோ தவுத்: நெதர்லாந்து அணி 163 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கிய போது அந்தக்கால தோனி போல நீள் தலைமுடி வீரர் மேக்ஸோ தவுத், இந்திய வம்சாவளி வீரர் விக்ரம்ஜித் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவுலிங் டைட்டாக இருந்தது. லஹிரு குமாரா சிறப்பாக பந்து வீசினார். தீக்‌ஷனா, தனது விரல் வித்தைகளைக் காட்ட, விக்ரம்ஜித் சிங் 14 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து மிட் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார். நெதர்லாந்தின் சிறந்த ஆல்ரவுண்டர் பாஸ் டி லீடா இறங்கினார். வந்தவுடனேயே அருமையான ஒரு கிளாசிக் கவர் ட்ரைவ், பிறகு ஒரு மிட்விக்கெட் பெரிய சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் இவரை லஹிரு குமாரா அருமையான பேக் ஆஃப் லெந்த் பந்தில் வீழ்த்தினார். பவர் ப்ளே முடிவில் 40/2 என்று இருந்தது நெதர்லாந்து.

ஆனால் ஒருமுனையில் மேக்ஸோ தவுத் அருமையாக ஆடி வந்தார். இன்னொரு முனையில் கொலின் ஆக்கர்மேன் டக் அவுட் ஆகி வெளியேறினார். டாம் கூப்பர் என்ற அனுபவ வீரர் இறங்கி அவருக்குச் சரியாக பந்து மாட்டவில்லை. இதனால் தவுத்துக்குச் ஸ்ட்ரைக் கொடுக்காமல் பந்துகளை விரயம் செய்தார், கடைசியில் 2 பவுண்டரிகள் எடுத்து 16 ரன்களில் வெளியேறினார். இன்னிங்ஸின் இந்த கட்டத்தில்தான் நெதர்லாந்து உத்வேகம் இழந்தது. 5 ஓவர்களில் வெறும் 25 ரன்களையே எடுத்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி மிடில் ஓவர்களில் அதாவது 7-15 ஓவர்களில் 73 ரன்களை எடுக்க, நெதர்லாந்து அணியோ இதே ஓவர்களில் 62 ரன்களையே எடுத்தது. கடைசியில் நெதர்லாந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதை வைத்துப் பார்க்கும்போது ஒன்று மிடில் ஓவர்களில் இலங்கையை நெதர்லாந்து கட்டுப்படுத்தி 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் நெதர்லாந்து வென்றிருக்கும். அல்லது பேட்டிங்கில் இந்த 7-15 ஓவர்களில் வெறும் 62 ரன்களை எடுக்காமல் 74-75 ரன்களை எடுத்திருந்தாலும் வென்றிருக்கும். நெதர்லாந்தின் கேப்டன் எட்வர்ட்ஸ் இறங்கி ஹசரங்காவை அடித்த 3 பவுண்டரிகள் மூலம் 21 ரன்கள் எடுத்து உத்வேகம் அளித்தார். இவர் நின்றிருந்தால் இலங்கைக்கு கஷ்டம்தான். ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவின் டெலிவரியை எட்வர்ட்ஸ் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து காலியாக இருந்த பைன்லெக்கில் அடிக்க முற்பட்ட போது ஸ்டம்புகளை இழந்து வெளியேறினார், இது இலங்கை வெற்றியில் பெரிய திருப்புமுனை.

மேக்ஸோ தவுத் விடாமுயற்சியுடன் இலங்கையை கதறவிட்டார். கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவை என்ற நிலை வர. தீக்‌ஷனா பவுலிங் போட வந்து சொதப்பினார். முதல் பந்தை இடுப்புக்கு மேல் உயரமாக புல்டாஸாக வீச அதை 82 மீ பவுண்டரிக்கு சிக்சர் அடித்தார் மேக்ஸோ. அந்த ஓவரில் இன்னொரு சிக்சரையும் விளாசினார் தவுத். அடுத்த 2 பந்துகளை தவுத் கனெக்ட் செய்ய முடியாததால் டாட் பால்களாக கடைசியில் சிங்கிள் வர அந்த ஓவரில் 16 ரன்கள் வந்தது. ஒருவேளை இன்னும் ஒரு சிக்சரையோ, ஒரு பவுண்டரியையோ தவுத் அடிக்க முடிந்திருந்தால் கடைசி ஓவரில் 15 -16 ரன்கள் தேவை என்று வந்திருக்கும் இலங்கை பதற்றமடைந்திருக்கும். ஆனால் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் குமாராவை அடிக்க முடியவில்லை. நெதர்லாந்து 146/9 என்று முடிந்தது. 16 ரன்களில் தோல்வி. ஹசரங்கா 3 விக்கெட், தீக்‌ஷனா 2 விக்கெட். ஆட்ட நாயகன் குசால் மெண்டிஸ். ஆம்! குசால் மெண்டிஸ் இல்லையெனில் இலங்கை தோற்று வெளியேறியிருக்கும். தோனி போல் நீள முடி வைத்திருக்கும் தவுத் இன்னிங்சை மறக்க முடியாது. அவர் 53 பந்துகளில் 71 ரன்களை 5 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்களுடன் எடுத்தார். மிடில் ஓவர்களில்தான் நெதர்லாந்து கோட்டை விட்டது.

ஆனால் நெதர்லாந்து ஆட்டத்தையும், அதன் திட்டமிடலையும், களவியூகத்தையும் பார்க்கும் போது அந்த அணியை இனியும் கத்துக்குட்டி அணி என்று பிராண்ட் செய்ய முடியாது என்பதுதான் விஷயம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x