Published : 20 Oct 2022 01:48 PM Last Updated : 20 Oct 2022 01:48 PM
374 சர்வதேச போட்டிகள்... 17,253 ரன்கள்... - ‘இந்திய அணியின் பயமறியான்’ சேவாக் பிறந்தநாள் பகிர்வு
“அந்தப் பையனுக்கு பயம் இல்ல. அவனலாம் அப்படியே போவ உட்றணும்” என ‘பொல்லாதவன்’ படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனம் என்னவோ இயக்குநர் வெற்றிமாறனின் கற்பனைதான். ஆனால், அதற்கு அப்படியே கச்சிதமாக பொருந்திப் போகிறவர்களில் ஒருவர் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தான். அந்த அளவுக்கு கிரிக்கெட் களத்தில் பயமே இல்லாமல் பந்தை காட்டடி அடித்து துவம்சம் செய்யும் வல்லமை படைத்தவர் அவர். இன்று அவருக்கு பிறந்தநாள்.
கிரிக்கெட் பந்தை ஈவு இரக்கமின்றி அடித்து, ரன் குவிக்கும் வீரர்களில் ஆல்-டைம் ஃபேவரைட் என்றால் அது சேவாக் தான். அப்படித்தான் வரலாறும் இருக்கிறது. இந்த டொக்கு வைத்து ஆடுவது எல்லாம் அவருக்கு பிடிக்காது. அவர் அடித்தால் அது டக்கர் என்ற ரகத்தில் இருக்கும். இன்று டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதை 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் செய்து கொண்டிருந்தவர்தான் சேவாக்.
அவர் ஆடும் ஸ்கொயர் கட், அப்பர் கட், லேட் கட் போன்ற ஷாட்டுகள் எல்லாம் அதிரிபுதிரி ரகமாக இருக்கும். அதை என்றென்றும் சேவாக் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அன்-ஆர்தடாக்ஸ் ஷாட்களை ஆடுபவர் என வர்ணனையாளர்கள் சேவாக்கை சொல்வது வழக்கம்.
அவரது சாதனை துளிகள் சில…
இந்திய அணி வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த வீரர். கடந்த 2008-இல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 319 ரன்களை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் குவித்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களை விளாசிய ஒரே இந்தியர்.
374 சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
17253 ரன்கள் குவித்துள்ளார்.
இதில் 38 சதங்கள் மற்றும் 72 அரை சதங்கள் அடங்கும்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது வீரர்.
2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியில் விளையாடிய வீரர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய இரண்டு கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். மற்றொருவர் கிறிஸ் கெயில்.
‘உலகின் மிக அற்புதமான தொடக்க ஆட்டக்காரர்’ என விஸ்டன் கிரிக்கெட் புக்கில் சேவாக் புகழப்பட்டுள்ளார்.
பேட்டிங் செய்யும்போது பாட்டு பாடும் வழக்கம் கொண்டவர் எனவும் சொல்லப்படுகிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7500 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே தொடக்க ஆட்டக்காரர் இவர் என சொல்லப்படுகிறது.
11 டெஸ்ட் கிரிக்கெட் சதங்களை 150 ரன்களுக்கு மேல் கன்வெர்ட் செய்த வீரர்.
WRITE A COMMENT