Published : 19 Oct 2022 05:13 PM
Last Updated : 19 Oct 2022 05:13 PM

T20 WC அலசல் | ஆஸி. ஆடுகளங்களில் அபாயகரமானது ‘டார்க் ஹார்ஸ்' எனும் தென் ஆப்பிரிக்க அணி. ஏன்?

தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள்.

ஒரு காலத்தில் பாகிஸ்தான் அணியை 'டார்க் ஹார்ஸ்' என சொன்னதுண்டு. ஏனெனில் எப்போது ஜெயிக்கும், எப்போது தோற்கும் என்று கூற முடியாது. கடந்த 1992-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியானது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக தோற்றும், இங்கிலாந்துக்கு எதிராக 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, மழை காரணமாக அந்த போட்டியில் முடிவு எட்டப்படாமல் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டதன் அதிர்ஷ்டத்தினால் கடைசியில் உலகக் கோப்பையை வென்றது.

தென் ஆப்பிரிக்கா அணியை அனைவரும் ஒதுக்கி விட்டு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இங்கிலாந்து நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணிக்கின்றனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவை அப்படி ஒதுக்கிவிட முடியாது என்பதனால்தான் அது ‘டார்க் ஹார்ஸ்’.

உலகக் கோப்பை நடப்பது ஆஸ்திரேலியாவில். ஆஸ்திரேலிய மண்ணில், அந்தப் பிட்சில் ஆஸ்திரேலியாவை விடவும் இது வரை நன்றாக ஆடிய ஒரு அணி உண்டென்றால் அது தென் ஆப்பிரிக்காதான் என்பதை மறக்கலாகாது.

1992 உலகக்கோப்பையின் போது பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வெல்லும் அணியாக எந்த ஒரு வல்லுனரின் கணிப்பும் கூறவில்லை, கடைசியில் இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்றது அந்த அணி. ஆனால் அது இம்ரான் கான். அதனால் டார்க் ஹார்ஸ் என்ற பட்டத்தைத் தாங்கி பாகிஸ்தான் வென்றது. இப்போது அதே நிலைமையில்தான் தென் ஆப்பிரிக்காவும் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எப்போதுமே உலகக்கோப்பைகளில் டார்க் ஹார்ஸ் என்ற பெயர் உண்டு. ஏனெனில் ஆஸ்திரேலியாவை ஜெயிப்பார்கள், ஆனால் வங்கதேசத்திடம் தோற்பார்கள்.

பாகிஸ்தான் போலவே சமீப காலங்களில் தென் ஆப்பிரிக்க அணியினர் இடத்தில் ஒரு நம்பமுடியாத தன்னம்பிக்கை புகுந்துள்ளது. அதனால்தான் தென் ஆப்பிரிக்கா மிக அபாயகரமான அணி.

அமீரகத்தில் நடைபெற்ற கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போலவே 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளைப் பெற்றிருந்தது தென் ஆப்பிரிக்கா. ஆனால் நெட் ரன் ரேட் 0.739 என்பதனால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. ஆனால் கடந்த முறை தென் ஆப்பிரிக்க அணி மிகப் பிரமாதமாக ஆடியதை நாம் மறந்து விடக்கூடாது.

இந்த முறை தென் ஆப்பிரிக்க அணி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் முதல் சுற்றுத் தகுதிப் போட்டிகளிலிருந்து தகுதி பெறும் 2 அணிகள் உள்ள பிரிவில் உள்ளது. இதில் இந்தியாவுக்கு பேர் ஆபத்து என்னவெனில் ஒன்று பாகிஸ்தான், இன்னொன்று தென் ஆப்பிரிக்காதான். கடந்த உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கான குரூப்பில் உள்ள முக்கிய போட்டியாளர்களிடம் இந்திய அணி தோல்வி கண்டால் வெளியேற வேண்டியதுதான்.

சமீபத்தில் கூட இந்திய அணியுடன் 1-2 என்று தொடரை இழந்தாலும், ஒரு போட்டியில் 237 ரன்களை விரட்டி, ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியினரை மிரட்டியது மறக்க முடியாது. ஏனெனில் அன்று டேவிட் மில்லர் 45 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய இன்னிங்ஸை யார் மறந்தாலும் மறக்காவிட்டாலும் இந்திய அணி மறக்கக் கூடாது.

தென் ஆப்பிரிக்க ​​​கேப்டன் டெம்பா பவுமா.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), குவிண்டன் டி காக், ரீசா ஹென்றிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நார்க்யா, வெய்ன் பார்னல், ககிசோ ரபாடா, ரைலி ரூசோவ், ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், டிவைன் பிரிட்டோரியஸ், மார்க்கோ ஜான்சென். ரிசர்வ் வீரர்கள்: ஜோர்ன் ஃபார்ட்டுயின், பெலுக்வயோ, லிசட் வில்லியம்ஸ்.

வார்ம்-அப் மேட்சில் நியூசிலாந்தை நொறுக்கிய தென் ஆப்பிரிக்கா: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை வார்ம்-அப் போட்டியில் 17ம் தேதி தென் ஆப்பிரிக்க அணி பிரிஸ்பன் மைதானத்தில் நியூசிலாந்தை செம உதை உதைத்ததைப் பார்த்தோம். நியூசிலாந்து அணியில் ஒருவரும் 30 ரன்கள் எடுக்கவில்லை 98 ரன்களுக்குச் சுருண்டது. வெய்ன் பார்னெல் 2 விக்கெட்டுகளையும், கேஷவ் மகராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷம்ஸி 2 விக்கெட்டுகளையும், ரபாடா, ஜான்சென், மார்க்ரம் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இத்தனைக்கும் கேன் வில்லியம்சன் தலைமையில் முழு அணியை களமிறக்கியது நியூசிலாந்து.

மார்டின் கப்டில், கேன் வில்லியம்சன் என்று பெரும்படை இருந்தும் டெவான் கான்வே ஆடவில்லை. ஆனாலும் 98 ரன்களுக்குச் சுருண்டதை என்ன சொல்வது. அதற்கு முழு காரணம் தென் ஆப்பிரிக்க அணியின் பவுலிங். இத்தனைக்கும் ரபாடா ஒரு ஓவர்தான் வீசினார். அதுவும் கடைசியில் வீசி லாக்கி பெர்குசன் விக்கெட்டை மட்டும் எடுத்தார்.

99 ரன்கள் என்ற இலக்கை வெகு சுலபமாக தென் ஆப்பிரிக்க அணி 11.2 ஓவர்களில் 100 ரன்களுக்கு, 1 விக்கெட் இழப்பு என்ற நிலையில் வெற்றி பெற்றது. ரைலி ரூசோவ் 32 பந்துகளில் 54 ரன்களை விளாச, ரீசா ஹென்றிக்ஸ் 27, மார்க்ரம் 16 நாட் அவுட் என்று பங்களிப்பு செய்தனர். இந்த வெற்றி மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை ஆகும்.

ரபாடா.

தென் ஆப்பிரிக்க அணியில் அபாயகரமான வீரர்கள் என்றால் குவிண்டன் டி காக். இவர் நினைத்தால் எந்த இலக்கையும் தனிநபராக விரட்டி விடுவார். அவரை தொடர்ந்து ரீசா ஹென்றிக்ஸ், ரைலி ரூசோ ஆகியோரும் உள்ளனர். டேவிட் மில்லர் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மார்க்ரம், டி20-யில் கிளாசாக விளையாடும் வீரர். ஹென்ரிஸ் கிளாசன் பினிஷர் பணிகளை கவனித்து வருகிறார். சுழற்பந்து வீச்சையும் திறன்பட எதிர்கொண்டு விளையாடுபவர்.

பவுலிங்கில் ரபாடா சொல்லத் தேவையில்லை. அவர் மட்டும் ஆஸ்திரேலிய பிட்ச்களில் முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தால் போதும். வெய்ன் பார்னல், நார்க்யா ஆகியோர் மிடில் ஆர்டரை கழற்றி விட்டால் அன்று நியூசிலாந்துக்கு ஏற்பட்ட கதி இந்தியா, பாகிஸ்தானுக்கும் ஏற்படும் அபாயமுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய பிட்ச்கள் நியூபாலில் எகிறும், தென் ஆப்பிரிக்க அணியின் பலவீனம் ஸ்பின் பவுலிங், அவர்கள் பேட்டர்களுக்கு ஸ்பின் ஆட வராது. பதற்றமாகி கேட்ச், ஸ்டம்பிங் ஆவார்கள். இதனைப் பயன்படுத்தி, இந்திய அணி அஸ்வின், சஹால், அக்சர் படேல் என்று அணியை அமைத்து விட்டால் அவர்கள் திண்டாடுவார்கள். அவர்களது அணியின் ஸ்பின்னரில் கேஷவ் மகராஜ் ஒரு டைட்டான, விக்கெட் எடுக்கும் பவுலராக உள்ளார். ஷம்சிக்கு ரிதம் கிடைத்து விட்டால் அவரது இடது கை சைனாமேன் பவுலிங் எந்த அணிக்கும் அச்சுறுத்தல்தான்.

மார்க்ரம்.

தென் ஆப்பிரிக்காவின் நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டிகள்: முதலில் அக்.24ம் தேதி தென் ஆப்பிரிக்கா அணி தகுதிச்சுற்றிலிருந்து வரும் ஒரு அணியை எதிர்கொள்கிறது, இந்தப் போட்டி ஹோபார்ட்டில் நடைபெறுகிறது இதை வெல்வதில் அந்த அணிக்கு ஒரு சிக்கலும் இல்லை. பிறகு 27ம் தேதி சிட்னியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது, வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் அணியே இடது கையால் வீழ்த்தும் போது தென் ஆப்பிரிகாவுக்கு ஒரு சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. அதுவும் ஆஸ்திரேலிய பிட்ச்களில்.

அடுத்ததாக 30ம் தேதி பெர்த் பிட்சில் இந்தியாவை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா. இது இரண்டு அணிகளுக்குமே சவால்தான், பெர்த் பிட்ச் எப்படி? மைதானம் எப்படி? என்பதெல்லாம் இரு அணிகளுமே அறிவர். இங்கு தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு கைக்கொடுத்தால் இந்திய அணிக்கு சிரமம்தான். அந்தப் பிட்ச்களில் இந்திய அணியின் ஸ்பின்னும் எடுபடுமா என்பது சந்தேகமே. எனவே இந்தப் போட்டி மிக மிக முக்கியமானது.

அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா நவம்பர் 3-ம் தேதி சிட்னியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதுவும் இரு அணிகளுக்கும் மிக மிக முக்கியமான போட்டி ஏனெனில் இந்தியா, பாகிஸ்தான் அணி போட்டியில் எந்த அணி தோற்றாலும் இந்தப் போட்டியை வெல்வது கடினமே. பாகிஸ்தான் அணியின் பீல்டிங் நிச்சயம் ஒரு கவலையளிக்கக் கூடியது. மாறாக தென் ஆப்பிரிக்கா அணியின் பீல்டிங் காலங்காலமாக அபாரமாக இருந்து வருகிறது. இதுதான் இந்தியா, பாகிஸ்தான் அணியை தென் ஆப்பிரிக்கா அணியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது.

மேலும், உலகக்கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய மைதானங்களில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங்கும், பவுலிங்கும் சோபிக்கும் என்பது தெரிந்த விஷயமே.

எனவே சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்பிரிக்கா வென்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறினால் நிச்சயம் அதில் ஒரு கலக்கு கலக்க வாய்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்கா எந்த அணியை எதிர்கொண்டாலும் அந்த அணியை வீழ்த்தி முதன் முதலில் உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதற்கான ஒரு மறைந்திருக்கும் திறமை அந்த அணியிடம் இருப்பதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இவர்களுக்கு எதிராக முழுத்திறனையும் காட்ட வேண்டியது அவசியமாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x