Published : 15 Oct 2022 04:36 PM
Last Updated : 15 Oct 2022 04:36 PM

ஆசிய கோப்பை கிரிக்கெட் | 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி

பட்டம் வென்ற இந்திய அணி

டாக்கா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

20-வது ஓவர் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இலங்கை 4-வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்தது. தொடர்ந்து பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்தது.

இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 3 ஓவர் வீசி 5 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் செஃபாலி வெர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மிருதி மந்தானா அதிரடியாக ஆடி, 25 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இறுதியில் 8.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 7-வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x