Published : 15 Oct 2022 12:01 PM
Last Updated : 15 Oct 2022 12:01 PM
சிட்னி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண 6 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளன.
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16-ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்களில் 7 நகரங்களில் நடைபெற உள்ளன. முதல் சுற்று நாளை தொடங்கும் நிலையில் பிரதான சுற்று 22-ம் தேதி ஆரம்பமாகிறது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் 22-ம் தேதி நியூஸிலாந்தை சந்திக்கிறது. தொடர்ந்து 23-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த ஆட்டத்தை நேரில் காண்பதற்கு மட்டும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் திருவிழாவை காண்பதற்கு 6 லட்சத்துக்கும் மேலான டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தொடக்க நாளில் நடைபெறும் முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை – நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்கள் சுமார் 36 ஆயிரம் இருக்கைகள் கொண்ட ஜீலாங்கில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.
சாம்பியனுக்கு ரூ.13.30 கோடி பரிசு..
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.30 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.65 கோடி கிடைக்கும். அரை இறுதியில் தோல்வியை சந்திக்கும் இரு அணிகளும் தலா ரூ.4.56 கோடியை பெறும். சூப்பர் 12 சுற்றில் வெளியேறும் 8 அணிகளும் தலா ரூ.57 லட்சம் பரிசுத் தொகையை எடுத்துச் செல்லும். முதல் சுற்றில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.32.58 லட்சம் கிடைக்கும். இந்த வகையில் முதல் சுற்றில் 12 ஆட்டங்களுக்கு சுமார் ரூ.3.91 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. முதல் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகள் தலா ரூ.32.58 லட்சம் பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT