Published : 13 Oct 2022 05:53 AM
Last Updated : 13 Oct 2022 05:53 AM
கிறைஸ்ட்சர்ச்: முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி.
நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நியூஸிலாந்து அணி தனதுகடைசி லீக் ஆட்டத்தில் நேற்று வங்கதேசத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.
டேவன் கான்வே 40 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் கிளென் பிலிப்ஸ் 24 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 60 ரன்களும் விளாசினர். ஃபின் ஆலன் 32, மார்ட்டின் கப்தில் 34 ரன்கள் சேர்த்தனர்.
வங்கதேச அணி தரப்பில் மொகமது சைபுதின், எபாதத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். 209 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் 44 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினார். சவுமியா சர்கார் 23, லிட்டன் தாஸ்23, நஜ்முல் ஹொசைன் 11 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் ஆடம் மில்ன் 3 விக்கெட்களையும் டிம்சவுதி, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
நியூஸிலாந்து அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் வங்கதேச அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிட்டது. இருப்பினும் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது பாகிஸ்தான் அணி. தொடர்ந்து நாளை (14-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து – பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT