Published : 12 Oct 2022 09:13 PM
Last Updated : 12 Oct 2022 09:13 PM
‘மனசார கேக்குறோம் இந்த முறை ஜெயிச்சிடுங்க’ என இந்திய அணியினரிடம் சிறுவன் ஒருவன் கேட்கும் வகையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த புரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் களத்தில் பலப்பரீட்சை செய்கிறது என்றால் சொல்லவே வேண்டாம். களத்திற்கு உள்ளே விளையாடும் வீரர்கள் மட்டுமல்லாது களத்திற்கு வெளியே விளையாட்டை ரசிக்கும் ரசிகர்களுக்கு இடையேயும் அனல் பறக்கும். அது உலகக் கோப்பை தொடர் என்றால் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.
அதற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் இந்த போட்டி குறித்த புரோமோவும் இருக்கும். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடியாக இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் விளையாடுகின்றன. இந்த நிலையில் ‘Mauka Mauka’ எனும் புரோமோ எந்தவொரு ரசிகராலும் மறக்க முடியாத ஒன்று.
அதன் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் வரையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை இந்த தொடரில் வென்றது இல்லை. அதை வைத்து இந்த புரோமோ அமைக்கப்பட்டு இருக்கும். அதாவது இந்த முறை பாகிஸ்தான் அணி வென்று விடும் என்ற எதிர்பார்ப்பில் பாகிஸ்தான் ரசிகர் பட்டாசுகளுடன் போட்டியை பார்ப்பது போன்றும். ஆனால் வெற்றி கிட்டாத காரணத்தால் பட்டாசுகளை வெடிக்காமல் திரும்பி செல்வது போன்றும் இந்த புரோமோ அமைந்திருக்கும். அது பாகிஸ்தான் ரசிகர்களை ட்ரோல் செய்யும் வகையில் இருக்கும்.
அது கடந்த ஆண்டு வரை தொடர்ந்து வந்தது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியுற்றது. இதனால் இப்போது இந்த போட்டிக்கான புரோமோவின் கருப்பொருள் மாற்றப்பட்டுள்ளது.
இந்த முறை இந்தியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் இந்திய அணி தோல்வியுற்ற அந்த போட்டியை நினைவுகோரும் வகையில் புரோமோ அமைந்துள்ளது. அன்றைய தினம் இந்திய ரசிகர்கள் கண்ணீர் சிந்தியதை போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ‘மனசார கேக்குறோம் இந்த முறை ஜெயிக்கச்சிடுங்க. தோல்வியை மறந்து எங்க காத்திருப்புக்கு முடிவ கட்டுங்க’ என அந்த சிறுவன் சொல்ல புரோமோ நிறைவு பெறுகிறது. அது அந்த சிறுவனின் குரல் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒருமித்த குரலும் கூட.
இரு அணிகளும் வரும் 23-ம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT