Published : 12 Oct 2022 01:46 PM
Last Updated : 12 Oct 2022 01:46 PM

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு புதிய ‘ட்விஸ்ட்’ கொடுத்த சூரியகுமார்: ஆச்சரிய ஷாட்கள் - ஒரு பார்வை

டி20 கிரிக்கெட்டின் மூலம் பார்வையாளர்களுக்குக் கிடைத்த அரும்பெரும் அனுபவம் என்னவெனில், இதுவரை பார்த்திராத புதிய புதிய ஷாட்களை வீரர்கள் ஆடுவதுதான். அதில் 360 டிகிரி வீரர் என்று சுழன்று சுழன்று அடிக்கும் ஏ.பி.டிவில்லியர்ஸ் நம்பர் 1 என்றால், இப்போது ரசிகர்களுக்கு அத்தகைய விருந்தை அளித்து வருபவர் சூரியகுமார் யாதவ் என்றால் மிகையாகாது.

சூரியகுமார் யாதவ் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20 தொடரில் கடைசி போட்டியில் அடித்த சதம் இதற்கு முதல் சான்று. அந்தப் போட்டியில் இருபுறமும் ஸ்கொயர் ஆஃப் த விக்கெட்டில் அவர் படித்த பவுண்டரிகள் அற்புதத்திலும் அற்புத அனுபவம். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்தை மரபான ட்ரைவ் அல்லது தூக்கி அடித்தல் செய்தால் அவுட் ஆக வாய்ப்பு; ஆனால் பந்தை நெருக்கமாகப் பார்த்து அதை அப்படியே ஒரு கிளறிக் கிளறி, கிண்டிவிட்டு தூக்கி விடுகிறார் பாருங்கள்... அது உண்மையில் பெரிய கற்பனை வளமான ஷாட் ஆகும்.

இருபுறமும் அவர் அந்த ஷாட்டை ஆடும்போது எதிரணியினரால் அந்த இடத்தில் பீல்டரை நிறுத்த முடியாது. ஏனெனில் அங்கு நிறுத்தினால், வேறு வழக்கமான ஷாட்கள் செல்லும் ஏதாவது ஓர் இடத்திலோ, இரண்டு இடத்திலோ பீல்டர்கள் இல்லாத நிலை ஏற்படும் இது அதை விடவும் அபாயகரமானது என்பதே.

சூரியகுமார் யாதவ் ஆடும் ஷாட்களில் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் போன்ற ஒன்று இருக்கும். ஆனால், அது அச்சு அசலான தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அல்ல. ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி எதற்குப் பயன்படுத்தினார் என்றால், அதிக ரூம் கொடுக்காமல் யார்க்கர் லெந்திலோ, ஃபுல் லெந்திலோ எதிரணி பவுலர்கள் வீசும் போது, அத்தகைய பந்துகளை தன் கையை சுழற்றுவதன் வேகத்தின் மூலம் மட்டையை ஒரு முழு ரவுண்ட் சுற்றி பந்தை பவுண்டரிக்கோ சிக்சருக்கோ அனுப்பும் கலையாகும் அது. அதை தோனி அனாயாசமாகச் செய்தார். இப்போது சூரியகுமார் யாதவ் அந்த ஷாட்டிலேயே இன்னொரு மேம்பாட்டை நிகழ்த்திக் காட்டியுள்ளார். அதாவது ஹெலிகாப்டர் ஷாட் போலவே ஆடி பிளிக் செய்வது.

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் லாங் ஆன் பகுதிக்குச் செல்லும் என்றால் சூரியகுமார் யாதவ்வின் ஹெலிகாப்டர் பிளிக் மிட்விக்கெட் பகுதிக்குச் செல்லும். இந்த ஷாட்டை ஆடும்போது சூரியகுமார் யாதவின் கால்கள் இரண்டும் அந்தரத்தில் நிற்கும், இதே ஷாட்டை மிட் ஆஃபிலும் இங்கிலாந்துக்கு எதிராக ஆடினார். இதை முதன் முதலில் அவரிடம் பார்த்தது மே.இ.தீவுகளுக்கு எதிராக அங்கு நடைபெற்ற போட்டி ஒன்றில் ஆபெட் மெக்காய் என்ற மே.இ.தீவுகள் பவுலர் பந்து வீச முழுதும் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்த சூரியகுமார் இரண்டு கால்களையும் தூக்கியவாறு பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார், அனைவருக்கும் மே.இ.தீவுகள் பவுலர், பீல்டர்கள் உட்பட அனைவருக்கும் ஷாக்.

இதே ஷாட்டை அல்ஜாரி ஜோசப்பிற்கு எதிராக பைன்லெக்கில் அடித்திருக்கிறார். ஒருவிதமான ஹெலிகாப்ப்டர் பிளிக் ஸ்கூப் ஷாட். இந்த ஷாட்டெல்லாம் பவுலரின் வேகத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ரன் குவிக்கும் முறையை வளர்த்தெடுத்துக் கொள்வதாகும்.

சூரியகுமார் யாதவைப் போல் இன்னொரு ஆச்சரியகரமான ஷாட்டை ஆடுபவர் இங்கிலாந்தின் ஆலி போப். இவர் ஆப்கான் ஸ்பின் மேதை ரஷீத் கானுக்கு எதிராக ஓரிருமுறை பயன்படுத்தியிருக்கிறார், பாகிஸ்தானின் ஷதாப் கானுக்கு எதிராக ஆடியுள்ளார்.

அதாவது ஸ்வீப் ஷாட் ஆடும்போது வலது கை பேட்டர் என்ன செய்வார், தனது இடது காலை முன்னே தூக்கிப் போட்டுத்தானே ஆடுவார்கள், ஆனால் ஆலி போப் வலது கை பேட்டராக இருந்து கொண்டே விசித்திரமாக தன் வலது காலை முன்னால் தூக்கிப் போட்டு சாதாரண, மரபான ஸ்வீப் ஷாட்டை ஆடியிருக்கிறார். இது எப்படி என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. இது நிச்சயம் பயிற்சி செய்து வருவது கிடையாது; உள்ளுணர்வு, இயல்பூக்க அடிப்படையில் ஆடும் ஷாட்களாகும்.

அதேபோல் சூரியகுமார் யாதவ் எதிரணியினரின் ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்திக்கு எதிராகவும் தனது பிரமாதமான புது வகை பேட்டிங் உத்தியைப் பயன்படுத்துபவர். லேசாக ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து லாங் லெக்கில் முழு சக்தியுடன் ஹூக் ஆடுவார், அல்லது அப்படியே ஸ்கூப் செய்து தூக்கி விடுவார். எதை எப்போது பயன்படுத்துவார் என்று தெரியாது. இதுபோன்று எதிர்பாராத ஷாட்களை ஆடும் வீரர்கள் எதிரணிக்கு எப்போதும் அச்சுறுத்தலே. இவர்கள் எந்த நிலையிலிருந்தும் போட்டியை வென்று கொடுத்துவிடுவார்கள். அன்று இங்கிலாந்து எடுத்த 221 ரன்களை ஏறக்குறைய சேஸ் செய்திருப்பார் சூர்யா. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்க இந்தியா தோல்வி கண்டது.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்கள் இவரது புது வகை ஷாட்களுக்கு கைக்கொடுக்குமா என்று தெரியவில்லை. ஆனால், பெரிய மைதானம் என்பதால் இடைவெளியை சூரியகுமார் நன்றாகப் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங்கை கண்டு எதிரணி பயப்படும் என்றால் அது சூரியகுமார் யாதவ்வின் புதுவகை பேட்டிங்கினால் என்றால் மிகையாகாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x