Published : 11 Oct 2022 04:35 PM
Last Updated : 11 Oct 2022 04:35 PM
பெர்த்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணியில் நெட் பவுலர்களாக இளம் இடக்கை பந்துவீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் இணைந்துள்ளனர்.
கடந்த 6-ம் தேதி ரோகித் தலைமையில் 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது. தற்போது வீரர்கள் மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அசோசியேஷனின் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். உலகக் கோப்பைக்கு ஏதுவாக பந்து பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்ட ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் இந்த முன்கூட்டிய பயிற்சி இந்திய அணிக்கு பெரிதும் உதவும்.
இந்நிலையில், முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சக்காரியா இணைந்துள்ளனர். இந்திய அணிக்கு இடக்கை பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் இம்சை கொடுப்பது வழக்கம். அதுவும் இப்போது பெரும்பாலான கிரிக்கெட் அணிகள் தங்கள் அணியில் இடக்கை பந்துவீச்சாளர்களை தவிர்க்காமல் சேர்த்து விடுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா என அந்த பட்டியல் நீள்கிறது. அந்தச் சிக்கலை சமாளிக்க இந்த இடக்கை பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலைபயிற்சியின்போது பந்து வீசுவது சிறந்த பயிற்சியாக இருக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முகேஷ் சவுத்ரி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், சேத்தன் சக்காரியா, டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் அணியில் இருப்பது பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலம் உறுதியாகி உள்ளது.
இந்திய அணி தொடரில் முதல் போட்டியில் வரும் 23-ம் தேதி அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. பும்ராவுக்கு மாற்றாக அணியில் இடம் பெற போகும் வீரர் யார் என்ற கேள்வியும் ஒருபக்கம் உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்திய அணி அது குறித்து அறிவிக்கும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT