Published : 18 Nov 2016 05:44 PM
Last Updated : 18 Nov 2016 05:44 PM

அஸ்வின் அரைசதம்; இந்தியா 455 ரன்கள்: பாலோ ஆனைத் தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்

விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியில் 2-ம் நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்சில் 455 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழது 103 ரன்கள் எடுத்துள்ளது.

ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் இருவரும் 12 ரன்களில் ஆட்டமிழக்கமால் உள்ளனர். ஃபாலோ ஆனைத்தவிர்க்க இன்னமும் 153 ரன்கள் தேவை என்ற நிலையில் 3-ம் நாளான நாளை (சனிக்கிழமை) ஆட்டம் நடைபெறவுள்ளது.

அஸ்வினும், ஜெயந்த் யாதவ்வும் துல்லியமாக வீசினர். கடைசியில் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் இருந்த போது ஜெயந்த் யாதவ் பந்தில் பென் ஸ்டோக்ஸ் பீட்டன் ஆனார், பந்து ஸ்டம்பில் பட்டது ஆனால் பெய்ல் விழவில்லை, தப்பித்தார். ஜெயந்த் யாதவ் 7 ஓவர்கள் 3 மெய்டன்களுடன் 11 ரன்களுக்கு 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார், இவரது டெஸ்ட் வாழ்வின் முதல் விக்கெட் கடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மொயின் அலி. இன்னிங்ஸின் 35-வது ஓவரை வீசிய ஜெயந்த் யாதவ் பந்தை பிளைட் செய்ய மேலேறி வந்து ஆடமுயலாமல் கால்காப்பில் தடுத்தார் மொயின் அலி. களத்தீர்ப்பு சாதகமற்ற நிலையில் மேல்முறையீடு செய்தார் ஜெயந்த் யாதவ், இது ஒரு சிறந்த முடிவு என்பது ரிபிளெயில் தெரிய வந்தது. லெக் ஸ்டம்ப்பைத் தாக்கும் பந்து அது என்பது தெரிந்தது. லெக் ஸ்டம்ப் நடுவருக்குரியது என்று நாட் அவுட் என்று கூறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 3-ம் நடுவர் அவுட் என்றார்.

ரவீந்திர ஜடேஜா வழக்கம் போல் வேகமாக ஓவர்களை வீசி பிரச்சினை கொடுத்தார், பந்துகளுக்கிடையே பேட்ஸ்மென்களுக்கு யோசிக்க நேரமில்லை. விறுவிறுவென வீசினார். இதனால் அவர் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாவிட்டாலும் பேட்ஸ்மென்களை முன்னால் வந்து ஆடமுடியாமல் செய்தார், இது அஸ்வினுக்குப் பயன் அளித்தது. பென் டக்கெட் 3 ஸ்டம்ப்களையும் காண்பித்துக் கொண்டு ஒரு ஸ்டான்ஸை கடைபிடித்தார். ஆனால் அஸ்வின் பந்து ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி லேசாக திரும்ப பவுல்டு ஆனார்.

ஜோ ரூட், ஆக்ரோஷமாகத் தொடங்கினார், மொகமது ஷமி பந்தை நடந்து வந்து மிட்விக்கெட்டில் பிளிக் பவுண்டரி அடித்து தான் எந்த மூடில் வந்திருக்கிறோம் என்பதை அறிவுறுத்தினார். பிறகு அதே ஓவரில் மிட் ஆனில் ஒரு அருமையான பவுண்டரியை அடித்தார். ஆனால் ஷமியும் விடவில்லை அடுத்த ஓவரிலேயே லேட் ஸ்விங்கில் ரூட் மட்டையைக் கடந்து செல்லுமாறு வீசி அச்சுறுத்தினார். ஆனால் ஜோ ரூட் ஸ்பின் சோதனைகளைக் கடந்து 91 பந்துகளில் அரைசதம் கடந்தார். அருமையாக ஆடி வந்த நிலையில் ஒரு கண நேர பித்தத்தினால் அஸ்வின் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்றார், பிட்ச் ஆஃப் த பந்துக்கு அவரால் செல்ல முடியவில்லை, அப்போதாவது ஷாட் ஆடாமல் தடுத்திருக்கலாம் ஆனால் அவர் ஷாட் ஆட முடிவெடுத்து அடித்தார், அது நேராக லாங் ஆஃபில் உமேஷ் யாதவிடம் கேட்ச் ஆனது.

ஷமி பந்தில் ஸ்டம்ப் உடைந்து, பறந்து அவுட் ஆன குக்:

முன்னதாக முதல் ஓவரிலேயே ஷமி பந்து வீச்சில் அலஸ்டர் குக் அவரிடமே கேட்ச் கொடுத்திருப்பார், ஆனால் தப்பித்தார். 2 ரன்களை மட்டுமே எடுத்த குக் ஷமியின் அருமையான ஒரு பந்தில் பவுல்டு ஆனார். ஆஃப் ஸ்டம்ப் உடைந்தது, பறந்து போய் 4 அடி தள்ளி விழுந்தது.

ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆன பந்து ஸ்விங் ஆகி வெளியே செல்லும் என்று நினைத்தார் குக், ஆனால் பந்து பிட்ச் ஆகி உள்ளே வர குக்கினால் அதனை ஆடமுடியவில்லை. ஸ்டம்ப் பறந்தது. பரபரப்பான பந்து வீச்சு, விக்கெட்டுடன் தொடங்கினார் ஷமி.

50 பந்துகளைச் சந்தித்து மற்றொரு தொடக்க வீரரான ஹமீத் அருமையாக ஆடி வந்தார், அவருக்கு ஷமி சிலபல ஷார்ட் பிட்ச் சோதனைகளைக் கொடுத்தாலும் தாக்குப் பிடித்தார். 13 ரன்கள் அடித்த நிலையில் ரூட்டினால் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

ரூட் மட்டும் அரைசதம் எடுக்காமல் வெளியேறியிருந்தால் ஒருவேளை இங்கிலாந்து இன்று மேலும் 3 விக்கெட்டுகளை இழந்திருக்கலாம், பிட்சில் பந்துகள் ஸ்பின் ஆகின்றன, ஆனால் அபாயகரமான அளவுக்கு அது இல்லை.

அஸ்வின் அரைசதம், ஜெயந்த் யாதவ் சிறப்பு:

இந்தியா 317/4 என்று தொடங்கியது, ,கோலி 151 ரன்களுடனும், அஸ்வின் 1 ரன்னுடனும் களமிறங்கினர்.

இதில் விராட் கோலி 167 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலி பந்தை டிரைவ் செய்ய முயன்று எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார், இதற்கு முன்னால்தான் பின்னங்காலில் சென்று ஆடி எட்ஜ் செய்த போது ஸ்லிப்பில் கேட்சை விட்டார் ஸ்டோக்ஸ், ஆனால் அடுத்த பந்தே கோலி கேட்சைக்கொடுத்து வெளியேறினார்.

விருத்திமான் சஹா 3 ரன்களில் மொயின் அலி பந்தில் எல்.பி.ஆனார். ஜடேஜா அதே ஓவரில் ரன் எடுக்காமல் எல்.பி.ஆனார், ஆனால் ஜடேஜா ரிவியூ செய்திருந்தால் தப்பித்திருக்கலாம் அஸ்வினின் அறிவுரையில் அவர் ரிவியூ செய்யவில்லை. மொயின் அலி 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி 363/7 என்று கட்டுப்படுத்தினார்.

பிறகு ஜெயந்த் யாதவ், அஸ்வின் ஜோடி 8-வது விக்கெட்டுக்காக 64 ரன்களைச் சேர்த்தனர், ஜெயந்த் யாதவ் முதல் போட்டியிலேயே அருமையான ஒரு பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார், பழையபாணி தடுப்பாட்ட உத்தி ஜெயந்த் யாதவுடையது, மட்டையையும் கால்காப்பையும் இணைத்து ஸ்பின்னை மண்ணோடு மண்ணாக அமுக்குவது, யாதவ் 35 ரன்களில் ரஷீத்திடம் வீழ்ந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 6 பவுண்டரிகளுடன் மேலும் ஒரு அரைசத்தத்தை தன் கணக்கில் சேர்த்து 58 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் கேட்சுக்கு வெளியேறினார்.

கடைசியில் உமேஷ் யாதவ் 3 பவுண்டரிகளையும் ஷமி இறங்கியவுடனேயே முதல் பந்தில் ரஷீத்தை மிக அருமையாக லாங் ஆஃபில் சிக்சர் அடித்து 7 ரன்களையும் சேர்த்த போது உமேஷ் யாதவ் அவுட் ஆக இந்தியா 455 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், அலி தலா 3 விக்கெட்டுகளையும் ரஷீத் 2 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ், பிராட் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x