Published : 10 Oct 2022 08:53 PM
Last Updated : 10 Oct 2022 08:53 PM
பெர்த்: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பலபரீட்சை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்தும், இந்திய அணி இந்தத் தொடருக்கு தயாராகி வருவது குறித்தும் பேசியுள்ளார் இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வின்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உள்ள மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அசோசியேஷனின் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த அணியில் அஸ்வினும் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி ‘சூப்பர் 12’ குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் உள்ளது. இரு அணிகளும் வரும் 23-ம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளன. இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.
“பாகிஸ்தான் அணியுடன் நாங்கள் அதிகம் கிரிக்கெட் விளையாடுவதில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியை குறித்து சொல்ல வேண்டாம். அது இரு நாட்டு மக்களுக்கும் முக்கியமானதாகும். ஆட்டத்தில் வெற்றி மற்றும் தோல்வி என்பது ஒரு பகுதி. டி20 ஃபார்மெட்டில் வெற்றி தோல்விக்கான மார்ஜின் மிகவும் குளோஸாக இருக்கும். நாங்கள் பாகிஸ்தான் அணிக்கு மதிப்பு அளிக்கிறோம். அதேபோல தான் அவர்களும்.
தொடரின் முதல் போட்டி. அதே நேரத்தில் இங்குள்ள கண்டிஷனுக்கு ஏற்ற வகையில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த வகை போட்டியில் நம்பிக்கை மிகவும் அவசியம். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஷார்டர் ஃபார்மெட் கிரிக்கெட்டில் எங்களது கடந்து கால செயல்பாடு அருமையாக உள்ளது. இங்குள்ள களத்தில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். அதற்கு ஏற்றவாறு தயாராகி வருகிறோம். பெர்த் அதற்கு சிறந்த களமும் கூட” என்று அவர் தெரிவித்துள்ளார். மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT