Published : 03 Nov 2016 02:10 PM
Last Updated : 03 Nov 2016 02:10 PM

ஹோல்டர் தலைமையில் மே.இ.தீவுகளுக்கு முதல் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தியது

ஷார்ஜா டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி ஹோல்டர் தலைமையில் முதல் டெஸ்ட் வெற்றியை ஈட்டியது.

ஆனால் தொடரை பாகிஸ்தான் 2-1 என்று கைப்பற்றினாலும் இந்தத் தோல்வி பெரிய ஏமாற்றமளிக்கிறது என்றார் மிஸ்பா உல் ஹக். ஆனால் மே.இ.தீவுகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்று அந்த அணியை பாராட்டவும் செய்தார்.

உண்மையில் முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் இன்னும் கொஞ்சம் உறுதியுடன் ஆடி டேரன் பிராவோவுக்கு யாராவது ஸ்டாண்ட் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். இந்த டெஸ்ட் தொடர் மே.இ.தீவுகள் மறு எழுச்சியின் தொடக்கமாக இருக்கலாம்.

ஆட்டத்தின் 44-வது ஓவரை மொகமது ஆமிர் வீச ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்று எழும்பிய பந்தை டவ்ரிச் தேர்ட்மேன் திசையில் பவுண்டரி விளாச அதுவே வெற்றி ரன்னாக அமைந்தது. இந்த டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் தொடக்க வீரர் பிராத்வெய்ட்டை வீழ்த்த முடியவில்லை, முதல் இன்னிங்சில் 142 நாட் அவுட். 2-வது இன்னிங்ஸில் 60 நாட் அவுட். மே.இ.தீவுகள் மேலும் சேதம் எதுவும் இல்லாமல் 154/5 என்று ஒரு அரிய டெஸ்ட் வெற்றியை பெற்றது.

39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இறங்கிய டவ்ரிச் மற்றும் பிராத்வெய்ட் எந்த நிலையிலும் மன உறுதியைக் கைவிடவில்லை. பிராத்வெய்ட் வஹாப் ரியாசை அருமையான கவர் டிரைவ் பவுண்டரி மூலம் தொடங்கினார். அபாய வீச்சாளர் யாசிர் ஷா ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார் டவ்ரிச். 7.5 ஓவர்களில் தேவையான ரன்களை எடுத்து வெற்றி பெற்றனர்.

2007-க்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு வெளியே வங்கதேச வெற்றிக்குப் பிறகு தற்போது பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானை மே.இ.தீவுகளுக்கு வெளியே 26 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்துகிறது. ஆட்ட நாயகனாக பிராத்வெய்ட்டும், தொடர் நாயகனாக 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய யாசிர் ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜேசன் ஹோல்டர், ஆட்ட நாயகன் கிரெய்க் பிராத்வெய்ட்டிற்கு தனது முழு பாராட்டுதலை தெரிவித்தார். மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானிய பேட்டிங்கைச் சாடினார். மேலும் தோல்விக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் மிஸ்பா உல் ஹக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x