Published : 07 Oct 2022 03:29 PM
Last Updated : 07 Oct 2022 03:29 PM

T20 WC | ஆஸ்திரேலியாவில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி

இந்திய அணி வீரர்கள் (கோப்புப்படம்).

பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான தனது முதல் பயிற்சியை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கி உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சமூக வலைதளத்தில் போட்டோ மூலம் பகிர்ந்துள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. 45 போட்டிகள் இதில் அடங்கும். முதல் சுற்று, சூப்பர் 12 மற்றும் நாக்-அவுட் என இந்தத் தொடர் நடைபெறுகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் உள்ளன. இந்தப் பிரிவில் முதல் சுற்றில் வென்று வரும் இரண்டு அணிகளும் இணைய உள்ளன.

வரும் 16-ம் தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரும் 23-ம் தேதி தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டம் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி முன்கூட்டியே அங்கு முகாமிட்டுள்ளது.

மும்பையில் இருந்து வியாழன் அன்று ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி. இந்நிலையில், மறுநாளான இன்று (வெள்ளி) பயிற்சியை தொடங்கி உள்ளது. இந்திய வீரர்கள் தற்போது மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான பெர்த் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த மைதானத்தில் வரும் 10 மற்றும் 13-ம் தேதி மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாடுகிறது. தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களும் பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.

ரோகித் சர்மா தலைமையில் தற்போது 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உள்ளனர். பும்ராவுக்கு மாற்று வீரரை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை. முன்னதாக, மும்பையில் இருந்து புறப்பட்ட இந்திய அணி குரூப் போட்டோ எடுத்துக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x