Published : 07 Oct 2022 03:08 PM
Last Updated : 07 Oct 2022 03:08 PM
எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்கள் இல்லாதது புதிய சாம்பியன்களை வெளிக்கொண்டு வர உதவும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இடம் பெறவில்லை. இதில் பும்ராவுக்கு மாற்று வீரரை இந்திய அணி இன்னும் அறிவிக்காமல் உள்ளது. 14 வீரர்கள் அடங்கிய இந்திய அணி தான் இப்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
“பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இப்போது அதிகளவில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகிறது. அதன் காரணமாக அதில் பங்கேற்பவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. பும்ரா காயமடைந்துள்ளார். ஆனால் இது அடுத்தவர்களுக்கு அணியில் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பு. நம்மிடம் தரமான மற்றும் பலமான அணி உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இது மாதிரியான தொடர்களில் அரையிறுதி வரை செல்வது மிகவும் முக்கியம்.
பும்ரா, ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு தான். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய சாம்பியன்கள் உருவாகலாம். அதே போல ஷமிக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உள்ள அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கைகொடுக்கும். கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அணி ஆஸியில் மேற்கொண்ட பயணத்தின் போது அவர் அணியுடன் பயணித்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT