Published : 27 Nov 2016 03:26 PM
Last Updated : 27 Nov 2016 03:26 PM

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி

அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக 3-வது டெஸ்ட் தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது.

இன்று 250 ரன்களுக்குத் தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சில் ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 127 ரன்கள் மட்டுமே. இதனை 40.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வென்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு ஸ்மித் அணி முற்றுப்புள்ளி வைத்தது.

2 டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சரிவு காரணமாகவும் தென் ஆப்பிரிக்காவின் அற்புதமான பவுலிங் பீல்டிங்கினாலும் தோல்வி தழுவிய ஆஸ்திரேலியா அணியில் தலைகீழ் மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த வெற்றியை உழைத்துப் பெற்றுள்ளனர்.

127 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் அதிரடி முறையில் ஆடி 51 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 47 ரனக்ள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதே ஓவரில் உஸ்மான் கவாஜா, ரன் எடுக்காமல் ஷம்சி பந்தில் எல்.பி.ஆனார்.

கேப்டன் ஸ்மித் 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆபட் பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அறிமுக தொடக்க வீரர் ரென்ஷா 137 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தும் வெற்றி ரன்னை அடித்த ஹேண்ட்ஸ்கோம்ப் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தனர்.

ஆட்ட நாயகனாக உஸ்மான் கவாஜா தேர்ந்தெடுக்கப்பட தொடர் நாயகனாக வெர்னன் பிலாண்டர் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x