Published : 08 Nov 2016 07:55 PM
Last Updated : 08 Nov 2016 07:55 PM
இந்திய ஸ்பின்னர்கள் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான பிட்ச்களிலும் சிறந்து விளங்க உள்நாட்டில் நல்ல பிட்ச்களை தயாரிப்பது அவசியம் என்கிறார் கங்குலி.
அஸ்வின் ஒரு ஸ்டார் பவுலர், உள்நாட்டில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம் ஆகியவற்றை தான் ஏற்றுக் கொண்டாலும் இதே அணி அடுத்த சுற்று வெளிநாட்டுத் தொடர்களில் ஆடுவதை வைத்தே கேப்டன், பயிற்சியாளர், ஸ்டார் பவுலர்களை தன்னால் கணிக்க முடியும் என்கிறார் கங்குலி.
“பிட்ச்கள் நன்றாக இருக்க வேண்டும். இந்தியா நல்ல பிட்ச்களில் ஆட வேண்டும். உள்நாட்டில் இந்திய அணியை வெற்றி பெற முடியாது என்பதே தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் அயல்நாட்டில் ஒரு நல்ல பவுலிங் யூனிட்டாக செயல்பட வேண்டுமெனில் அதாவது அங்கும் நமது ஸ்பின்னர்கள் நமக்கு வெற்றி தேடித் தர வேண்டுமெனில் நல்ல பிட்ச்களில் ஆடிப்பழக வேண்டும்.
அஸ்வினும், ஜடேஜாவும் நல்ல பிட்சில் அதாவது நல்ல முதல்நாள், இரண்டாம் நாள் பிட்ச்களில், அதாவது அதிகம் பந்துகள் திரும்பாத முதல் 2 நாள் பிட்ச்களில் நன்றாக வீச கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது நல்ல திசை மற்றும் அளவில் வீசி அதிகம் உதவியில்லாத பிட்ச்களில் சிறப்பாக வீசும் கலையை அவர்கள் கற்க வேண்டும். இத்தகைய பிட்ச்களில் 4 மற்றும் 5-ம் நாட்களில்தான் ஆட்டத்தில் திருப்பம் ஏற்படும், அத்தகைய பிட்ச்களையே நான் சிபாரிசு செய்வேன்” என்றார்.
சமீபத்தில் ஹர்பஜன் சிங் பிட்ச்கள் பற்றி கூறிய கருத்து அதற்கு ஏற்பட்ட எதிர்வினைகள் பற்றி கங்குலி கூறும்போது, “ஹர்பஜன் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் இந்தியாவின் சாம்பியன் பவுலர். சில பிட்ச்களில் பந்துகள் சதுரவடிவில் திரும்புவதை நான் அறிவேன். இது அஸ்வினின் தவறல்ல. அவருக்கு இத்தகைய பிட்ச்கள் கிடைத்தன அவ்வளவே. ஹர்பஜன் ஒரு கிரேட் பவுலர், அவர் இந்திய கிரிக்கெட்டின் ஒரு மகா ஊழியர், அவர் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் ரசித்து மற்றவற்றை விட்டுவிட வேண்டும். தென் ஆப்பிரிக்கா தொடருக்கு எதிரான பிட்ச்களை நான் பார்த்தேன். அதே தொடரில் ஹர்பஜன் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். அவருக்கு இத்தகைய பிட்ச்கள் கிடைக்கவில்லை என்பதால் மற்றவர்களை விட ஹர்பஜன் குறைந்த பவுலராகி விடமாட்டார்.
அஸ்வின் ஆசியாவில் விளையாடிய முதல் 12-13 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் பக்கம் சாய்த்திருப்பார். அவர் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் எப்படி வீசுவார் என்பது பற்றி நிறைய கேள்விகள் எப்போதும் உள்ளன. இதில் அவரிடம் நிச்சயம் முன்னேற்றம் உள்ளது. அவர் அந்த பிட்ச்களிலும் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளார் என்றே கூற வேண்டும்.
திரும்பும் பிட்ச்களில் வீசுவது கடினமல்ல. அஸ்வின், ஜடேஜாவை இத்தகைய பிட்ச்களில் எதிர்கொள்ள இங்கிலாந்து சிறப்பாக ஆடுவது அவசியம். டாஸ் மிக முக்கியம். இங்கிலாந்து அணி டாஸில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுப்பார்கள். டாஸில் அனைத்தும் உள்ளது, ஆனால் அஸ்வின் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
ஆனாலும் நான் தோனியிடம் கேள்வி எழுப்பியது போல், அல்லது தோனியிடம் கேள்வி எழுப்பிய அனைவரையும் போல், அயல்நாடுகளில் எப்போது தொடரை வெல்லப் போகிறோம். அதே கேள்வி கோலியிடமும் கும்ப்ளேயிடமும் எனக்கு உள்ளது.
தற்போது இந்த 9 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் நாம் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து என்று பயணம் செய்யப்போகிறோம். எனவே ஒரு முழுச்சுற்று ஆடிய பிறகுதான் கோலி-கும்ப்ளே இணையை நான் அறுதியிட முடியும். இப்போதைக்கு இவர்களுக்கு சவால்கள் ஏற்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT