Published : 05 Oct 2022 03:29 PM
Last Updated : 05 Oct 2022 03:29 PM
அண்மையில் தனது எதிர்கால திட்டம் என்ன என்பதை பகிர்ந்திருந்தார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ். ஆனால், அவர் இனி கிரிக்கெட் களத்தில் விளையாடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனை வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதள இன்ட்ரக்ஷன் மூலம் அவர் பகிர்ந்திருந்தார்.
மிஸ்டர் 360 டிகிரி என அறியப்படுபவர் டிவில்லியர்ஸ். மொத்தம் 420 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 20,014 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகள் அடங்கும். 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 156 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.
இந்நிலையில், இனி தன்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். “அடுத்த ஆண்டு நிச்சயம் நான் சின்னசாமி மைதானத்தில் நிச்சயம் இருப்பேன். ஆர்சிபி அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுக்க தவறியதற்காக ரசிகர்கள் என்னை மன்னிக்கவும். ரசிகர்களின் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. என்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் எனது வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நிச்சயம் நான் எந்தவொரு அணியையும் வழிநடத்தப் போவதில்லை. நான் கற்றதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 18 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு வீட்டில் கொஞ்ச நேரம் செலவிட முடிவதில் மகிழ்ச்சி.
எனக்கு வயதாகிவிட்டது. லெஜெண்ட்ஸ் லீக் தொடர் மிகவும் வேடிக்கையாக உள்ளது. எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், எனக்கு கண்ணில் அறுவை சிகிச்சை இருந்தது. ஒரு கண்ணுடன் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். விரைவில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT