Published : 04 Oct 2022 10:43 PM
Last Updated : 04 Oct 2022 10:43 PM

IND vs SA | நிலைக்க தவறிய முன்னணி வீரர்கள் - 3வது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி

இந்தூர்: இந்தூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

3 ஆட்டங்கள் கொண்ட டி 20கிரிக்கெட் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன்மூலம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் பவுலிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்தூர் ஆடுகளத்தில் பவர்பிளே முடிவதற்குள்ளாகவே தென்னாபிரிக்க கேப்டன் பவுமா தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும் டி காக் - ரூஸோவ் இணைந்து வானவேடிக்கை நிகழ்த்தினர். இவர்கள் கூட்டணியை பிரிக்க இந்திய பவுலர்கள் முயன்றும் பலனில்லை. 13வது ஓவரின்போது 68 ரன்கள் எடுத்திருந்த டி-காக் ரன் அவுட் செய்யப்படவே இவர்கள் இணை பிரிந்தது. இதன்பின் ரூஸோவ் தனது வானவேடிக்கையை தொடர்ந்தார். சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய ரூஸோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். அவரின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு தென்னாபிரிக்க அணி 227 ரன்கள் குவித்தது.

228 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. ரபாடா வீசிய முதல் ஓவரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா போல்டாகி வெளியேறினார். அதற்கடுத்த ஓவரிலேயே ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னுக்கு நடையைக்கட்டினார். ரிஷப் பந்த் 27 ரன்களுக்கு அவுட் ஆனார். வந்த முதல் பந்தில் இருந்தே அதிரடியை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் மளமளவென ரன்களை குவித்தார். அதேநேரம் அவசரப்பட்டு விக்கெட்டையும் பறிகொடுத்தார்.

கேசவ் மகாராஜ் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸரை பறக்கவிட்ட, ஸ்வீப் ஆட முயன்று போல்டானார். 21 பந்துகளில் தலா 4 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் அவர் 46 ரன்கள் எடுத்திருந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் ஒரு சிக்ஸ் மட்டும் அடித்துவிட்டு அடுத்த ஓவரே பெவிலியன் திரும்பினார். இப்படி, 8 ஓவர் முடிவில் அனைத்து முன்னணி விக்கெட்டையும் இழந்து இந்திய அணி தடுமாறியது.

இதன்பின் வந்த டெயிலண்டர்களில் தீபக் சஹார் தவிர மற்றவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்க அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x