Published : 04 Oct 2022 06:15 AM
Last Updated : 04 Oct 2022 06:15 AM
இந்தூர்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்றுஇரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
3 ஆட்டங்கள் கொண்ட டி 20கிரிக்கெட் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன்மூலம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.
குவாஹாட்டியில் பேட்டிங்கில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 237 ரன்களை வேட்டையாடி இருந்தது. ஆனால் பந்து வீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியாமல் போனது. தென் ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய வெற்றியை நெருங்கிய நிலையிலேயே தோல்வியை சந்தித்தது. அந்த அணி பவர்பிளேவில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இறுதிக்கட்டத்தில் இது பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருந்தது.
இன்று நடைபெறும் ஆட்டம் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி டி 20 போட்டி என்பதால் பந்துவீச்சில் மீண்டும் ஒரு சோதனை கட்டத்தை இந்திய வீரர்கள் எதிர்கொள்ளக்கூடும். ஏனெனில் பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரோஹித்சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே சிறந்த பார்முக்கு திரும்பிவிட்டனர். பந்து வீச்சு மட்டுமே இன்னும் வலுப்பெறாமல் உள்ளது.
ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது இந்திய அணியின் பந்துவீச்சு துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது, குறிப்பாக இறுதிக்கட்ட ஓவர்களில் தடுமாற்றம் காண்கிறது. டி 20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பும்ரா முழு உடற்தகுதியை பெறாதநிலை ஏற்பட்டால் இந்திய அணி மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள தீபக் சாஹர், தொடக்க ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் இறுதிக் கட்ட ஓவர்களில் அழுத்தம் கொடுப்பவராக இல்லாதது குறையாக உள்ளது.
அர்ஷ்தீப் சிங் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக செயல்படுபவராக இருந்தாலும் அவரிடம் இருந்து சீரான செயல் திறன் வெளிப்படுவதில்லை. குவாஹாட்டி போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அவர், 3 நோபால்களை வீசினார். தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவதில் அர்ஷ்தீப் சிங் கவனம் செலுத்தக்கூடும்.
காயத்தில் இருந்து திரும்பியதில் இருந்து ஹர்ஷால் படேலின் பந்து வீச்சு மாறுபாடுகள் நினைத்த அளவுக்கு பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் அமையவில்லை. இது ஒருபுறம் இருக்க அஸ்வின் இரு ஆட்டங்களில் விளையாடிய போதிலும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.
இதற்கிடையே தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுடன் ரிஷப் பந்த்அல்லது சூர்யகுமார் யாதவ்தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். விராட் கோலி இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார். 2-வது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 7 பந்துகளை மட்டுமே சந்தித்தார். இதனால் பேட்டிங்கில் அவருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்குவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். பந்து வீச்சில் மொகமது சிராஜ் களமிறங்கக் கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT