Published : 17 Nov 2016 02:26 PM
Last Updated : 17 Nov 2016 02:26 PM
ஜிம்பாப்வேயில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மே.இ.தீவுகள் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹராரேயில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி கடினமான பிட்சில் 227 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி ஹோல்டர் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் நர்ஸ் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சினாலும் அருமையான பீல்டிங்கினாலும் இலங்கையை 165 ரன்களுக்குச் சுருட்டி போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்று 5 புள்ளிகளை ஈட்டியது.
மே.இ.தீவுகள் அணியில் அறிமுக போட்டியில் ஆடிய எஸ்.டி.ஹோப், நர்ஸ், ஆர்.போவல் ஆகியோர் அருமையான திறமைகளை வெளிப்படுத்தினர். ஹோப் பேட்டிங்கில் 47 ரன்களையும், போவல் அதிரடி முறையில் 29 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 44 ரன்களையும் விளாச மற்றொரு அறிமுக வீரர் நர்ஸ் 10 ஓவர்களில் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
டாஸ் வென்ற இலங்கை முதலில் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தது. சார்லஸ் 2 ரன்களிலும் பிராத்வெய்ட் 14 ரன்களிலும் வெளியேற 27/2 என்று தடுமாறிய மே.இ.தீவுகள் அணியை 49 ரன்கள் கூட்டணி அமைத்து ஈ.லூயிஸ் (27), ஹோப் (47) ஆகியோர் ஓரளவுக்கு நிலைநிறுத்தினர். பிறகு ஜே.எல். கார்ட்டர் 62 பந்துகளில் 2 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். போவல் தனது பந்தை அடிக்கும் திறமையை வெளிப்படுத்தி லெக் திசையில் 3 சிக்சர்களுடனும் 2 பவுண்டரிகளுடனும் 29 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மே.இ.தீவுகள் 250 ரன்கள் எடுக்கும் என்ற நிலையில், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மீண்டும் வந்து விக்கெட்டுகளை வீழ்த்த மே.இ.தீவுகள் தனது கடைசி 5 விக்கெட்டுகளை 18 ரன்களில் இழந்து 49.2 ஓவர்களில் 227 ரன்களையே எடுத்தது. இலங்கை தரப்பில் குலசேகரா, லக்மல், நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த பதிரனா, குணரத்னே தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி தொடக்கத்தில் ஜேசன் ஹோல்டரின் அருமையான ஸ்விங் பவுலிங்கிற்கு டிசில்வா, மெண்டிஸ் ஆகியோரை மலிவான ஸ்கோருக்கு இழக்க, பெரேரா, சார்லஸின் அருமையான நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக, கேப்டன் உபுல் தரங்கா பிட்சின் கோளாறினால் நர்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க அசேலா குணரத்னேயை நர்ஸ் எல்.பி.செய்ய இலங்கை 79/6 என்று சரிவு கண்டது. அப்போது சசித் பதிரானா (45), ஷேஹன் ஜெயசூரியா (31) இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 60 ரன்களை சுமார் 13 ஓவர்களில் சேர்த்தனர். ஆனால் தொடக்கத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக இலங்கையினால் மீள முடியவில்லை. 43.1 ஓவர்களில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை இழந்து தோல்வி தழுவியது.
மே.இ.தீவுகள் அணியில் கேப்ரியல், நர்ஸ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஜேசன் ஹோல்டர் 8 ஒவர்களில் வெறும் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் அவர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT