Published : 01 Oct 2022 05:30 AM
Last Updated : 01 Oct 2022 05:30 AM
காந்திநகர்: 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் வாள்வீச்சில் தமிழகத்தின் பவானி தேவி, டிரிப்பிள் ஜம்ப்பில் பர்வின் தங்கம் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் இளவேனில் வாலறிவன், பளு தூக்குதலில் மீரபாய் சானு ஆகியோரும் தங்கம் வென்றனர்.
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் அசாமை சேர்ந்த மீராபாய் சானு 191 கிலோ எடையை (ஸ்நாட்ச் 84 கிலோ, கிளீன் & ஜெர்க் 107 கிலோ) தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். அசாம் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான சஞ்ஜிதா சானு 187 கிலோ எடையை தூக்கி (82+105) வெள்ளிப் பதக்கமும், ஒடிசாவின் ஸ்நேகா சோரன் 169 கிலோ எடையை தூக்கி (73+96) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த தேவேந்தர் சிங் பந்தய தூரத்தை 01:26:25 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். உத்தராகண்டின் சூரஜ் பன்வார் (01:26:25 நிமிடங்கள்) வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஆகாஷ்தீப் சிங் (01:28:15 விநாடிகள்) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் குஜராத்தின் இளவேனில் வாலறிவன் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமாவை வீழ்த்தி தங்கம் வென்றார். மேற்கு வங்கத்தின் மெஹூலி கோஷ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மகாராஷ்டிராவின் ருத்ராங்க் ஷ் பி. பாட்டீல் தங்கப் பதக்கமும், பஞ்சாப்பின் அர்ஜூன் பபுதா வெள்ளிப் பதக்கமும், மத்திய பிரதேசத்தின் ஐஸ்வரி பி.எஸ். தோமர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் ஹரியாணாவின் அனிஷ் தங்கம் வென்றார். உத்தராகண்டின் அங்குர் கோயல் வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் குர்மீத் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
ஆடவருக்கான நெட்பால் இறுதிப் போட்டியில் ஹரியாணா 75-73 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. தடகளத்தில் நேற்று 9 சாதனை
கள் படைக்கப்பட்டது. மகளிருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் உத்தரப்பிரதேசத்தின் முனிதா பிரஜாபதி 01:38:20 நிமிடங்கள் பந்தய தூரத்தை கடந்து தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு ஷப்னா பந்தய தூரத்தை 1:40:35.00 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. முனிதாவின் தந்தை கட்டிட தொழிலாளி ஆவார். உத்தரகாண்டின் மான்ஷி நெகி (01:41:28 நிமிடங்கள்), ரேஷ்மா படேல் (01:42:10 நிமிடங்கள்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சர்வீசஸ் அணியை சேர்ந்த பர்வேஜ் கான் பந்தய தூரத்தை 3:40.89 விநாடிகளில் கடந்து தேசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 1994-ல் புனேவில் நடைபெற்ற போட்டியில் பகதூர் பிரசாத் 3:43.57 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. மகளிருக்கான உயரம் தாண்டுதலில் மத்திய பிரதேசத்தின் ஸ்வப்னா பர்மான் 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் 2001-ல் பாபி அலாய்சியஸ் 1.82 மீட்டர் உயரம்
தாண்டியதே சாதனையாக இருந்தது. தமிழகத்தின் கிரேஸ் கிளிஸ்டஸ் மெர்லி 1.81 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பர்வின் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் ரஞ்சித் மகேஸ்வரி 16.66 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஹீட்ஸ் 1-ல் தமிழகத்தின் அர்ச்சனா பந்தய தூரத்தை 11:41 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அசாமின் ஹிமா தாஸ் (11:81), ஆந்திராவின் ஜோதி யார்
ராஜி (11:45), மகாராஷ்டிராவின் தியாந்திரா (11:57), ஒடிசாவின் டூட்டி சந்த் (11:58), மேற்கு வங்கத்தின் ஹிமாஸ்ரீ ராய் (11:59), ஒடிசாவின் சரபானி நந்தா (11:62), கர்நாடகாவின் தனேஷ்வரி (11:71) ஆகியோரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
வாள்வீச்சில் மகளிருக்கான சேபர் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், 15-3 என்ற கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்தார். தேசிய விளையாட்டில் அவர், தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கம் வென்றுள்ளார். வாள்வீச்சில் ஆடவருக்கான ஃபாயில் பிரிவில் தமிழகத்தின் வேலாயுதம் வினோத் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.மகளிருக்கான மல்யுத்தத்தில் 76 கிலோ எடைப்பிரிவில் உத்தரப்பிரதேசத்தின் திவ்யா கரன் தங்கம் வென்றார். ரக்பியில் ஆடவர் பிரிவில் ஹரியாணாவும், மகளிர் பிரிவில் ஒடிசாவும் தங்கம் வென்றன. சங்கிலி குண்டு எறிதலில் பஞ்சாப்பின் தம்னீத் சிங் 67.62 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன்னர் 2011-ல் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் ஹர்விந்தர் சிங் 66.79 மீட்டர் தூரம் எறிந்ததே சாதனையாக இருந்தது. மகளிருக்கான குண்டு எறிதலில் உத்தரப்பிரதேசத்தின் கிரண் பாலியன் 17.41 மீட்டர் தூரம் எறிந்து சாதனையுடன் தங்கம் வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT