Published : 15 Nov 2016 03:43 PM
Last Updated : 15 Nov 2016 03:43 PM

அபாட், ரபாடா பந்து வீச்சில் சுருண்டு ஆஸி. இன்னிங்ஸ் தோல்வி: டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு சுருட்டி தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதோடு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று வென்றுள்ளது.

121/2 என்/று தொடங்கிய ஆஸ்திரேலியா 129 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் 4-ம் நாளான இன்று தாக்குப்பிடித்தது, ஆனால் அதன் பிறகு 32 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் ஒரு சரிவுக்கு ஆளானது. கைல் அபாட் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் ரபாடா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி கண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 3-வது முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது தென் ஆப்பிரிக்கா.

இது ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சீரழிவு தோல்வியாகும் உணவு இடைவேளை வரை கூட இன்று தாக்குப் பிடிக்க முடியவில்லை. மொத்தமே ஆஸ்திரேலியா இந்த டெஸ்ட் போட்டியில் 558 பந்துகளையே சந்தித்துள்ளது.

உஸ்மான் கவாஜா 64 ரன்கள் எடுத்து கைல் அபாட் பந்தை எட்ஜ் செய்து டி காக் கேட்ச் பிடிக்க வெளியேறினார். அபாட், ரபாடா ஆகியோரின் ஸ்விங், பவுன்ஸ் எதையும் ஆஸ்திரேலிய வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிலாண்டர் பயங்கர டைட்டாக வீசி ரன்களை வறளச் செய்தார் சுமார் 5 ஓவர்களை அவர் ரன் கொடுக்காமல் வீசினார். ஸ்டீவ் ஸ்மித் சுமார் 40 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார் இன்று தன் முதல் ரன்னை எடுக்க திணறியது ஆஸ்திரேலியா.

கவாஜாவுக்குப் பிறகு ஆடம் வோஜஸ் விக்கெட்டை இழந்தார். அவர் குழப்பமாக பந்தை ஆடாமல் விட முடிவெடுத்த போது கிளவ்வில் பட்டு டுமினியிடம் ஸ்லிப்பில் பந்து சரணடைந்தது., அபாட்டுக்கு விக்கெட். இதன் மூலம் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான இவரது கடைசி 5 டெஸ்ட் போட்டி சராசரி 14.8. இதற்கு முன்னர் மே.இ.தீவுகள், நியூஸிலாந்துக்கு எதிராக சராசரி 342 என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவரது இடம் கேள்விக்குறியானது.

கேலம் பெர்குசனும் ரபாடாவின் பவுன்சரை ஆடாமல் விட முடிவெடுக்க பந்து எழும்பவில்லை இதனால் கிளவ்வில் பட்டு ஸ்லிப்புக்கு சென்றது, இந்தப் பந்து பவுன்ஸ் ஆகாமல் விக்கெட்டை வீழ்த்த, பீட்டர் நெவிலுக்கு ரபாடா வீசிய பவுன்சர் கூடுதலாக எழும்பி ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. இதே ஓவரில் ஜோ மெனியை எல்.பி. செய்தார் ரபாடா. ஸ்மித் ஒரு முனையில் 31 ரன்கள் எடுத்து போராடி வந்த நிலையில் ரபாடாவின் அவுட்ஸ்விங்கரை எட்ஜ் செய்து வெளியேறினார். ஸ்டார்க்., அபாட் பந்தை எட்ஜ் செய்ய, நேதன் லயன் மிட் ஆனில் கேட்ச் கொடுக்க அபாட் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாகவும் அபாட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலியா 161 ரன்களுக்குச் சுருண்டு சற்றும் எதிர்பாராத வகையில் இன்னிங்ஸ் தோல்வி கண்டது.

பொதுவாக சிறந்த பவுலர்களான ஸ்டெய்ன், மோர்கெல் இருக்கும் போது அபாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது ஆனால் அவர் எவ்வளவு அபாயகரமான ஸ்விங் பவுலர் என்பதை இன்று நிரூபித்துள்ளார்.

“அடுத்த டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் பகலிரவு போட்டியில் ஆட ஆவலாக உள்ளோம், ஆஸ்திரேலியாவை 3-0 என்று அவர்கள் மண்ணில் வீழ்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பல அணிகள் செய்ததில்லை, எனவே இதனை செய்து முடிப்பதுதான் எங்களது தற்போதைய குறிக்கோள்” என்கிறார் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெசிஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x