Published : 29 Sep 2022 09:30 PM
Last Updated : 29 Sep 2022 09:30 PM

T20 WC | இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்றாக களமிறங்கும் பவுலர் யார்?

பும்ரா | கோப்புப் படம்

அடுத்த சில நாட்களில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில் அவருக்கு மாற்றாக இந்திய அணியில் விளையாடப் போகும் வீரர் யார் என்பதை பார்ப்போம்.

பும்ரா, டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார் என்ற செய்தி பரவ தொடங்கியது முதல் அவருக்கு மாற்று யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துவிட்டது. இந்த தொடருக்கு இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் அடங்கிய வீரர்களோடு ரிசர்வ் வீரர்களும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பிரதான ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது பும்ராவும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். “அவருக்கு மாற்று வீரரே இல்லையா என்ன? தேடினால் அடையாளம் காணலாம்” என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

பும்ராவும் டி20 கிரிக்கெட்டும்!

டி20 ஃபார்மெட்டில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தவர் பும்ரா. இவர் வசம் உள்ள யார்க்கர் தான் அவரது ஸ்பெஷல். அதனை எதிர்கொள்வது என்பது சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன்களுக்கே கொஞ்சம் சவாலான டாஸ்க் தான். அதனை தடுக்கா விட்டால் பந்து ஸ்டெம்புகளை தகர்த்து விடும். இவர் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவார். இருந்தாலும் இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும் பட்சத்தில் பும்ரா வசம் தான் பந்து வீசும் பொறுப்பை கேப்டன்கள் ஒப்படைப்பர். அவரும் விக்கெட் வீழ்த்திக் கொடுப்பார்.

2016 வாக்கில் இந்திய அணியில் நுழைந்தார். இதுவரை மொத்தம் 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 1,129 பந்துகள் வீசி உள்ளார். இவரது பவுலிங் எக்கானமி 6.62. அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இவர் இல்லாமல் இந்திய அணி டெத் ஓவர்களில் ரொம்பவே சிரமத்தை எதிர்கொண்டது. இப்போது அது உலகக் கோப்பை தொடரிலும் தொடர்கதை ஆகிவிடுமோ என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது. இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் பும்ரா நடப்பு ஆண்டில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடவில்லை என்பது தான். அவர் மொத்தம் 5 போட்டிகளில் தான் விளையாடி உள்ளார். அதில் 16 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

பும்ராவுக்கு மாற்று யார்? - இந்த விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் கிட்டத்தட்ட அதை இந்நேரம் முடிவு செய்திருக்கும். கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு வீரர்களை டி20 கிரிக்கெட்டிடல் சோதித்து பார்த்தது இந்திய அணி. இதெல்லாம் உலகக் கோப்பையை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி. இந்நிலையில், இப்போது பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு ரியல் சோதனையாக அமைந்துள்ளது.

முகமது ஷமி: இந்திய அணி எப்படியும் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள ரிசர்வ் வீரரை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் அனுபவ வீரர் ஷமிக்கு அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இப்போது அவர் அணியில் ரிசர்வ் வீரராக உள்ளார். இருந்தாலும் அவர் கடைசியாக சர்வதேச டி20 போட்டியில் விளையாடியது கடந்த 2021 நவம்பரில். அதன் பிறகு அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் அவரால் கரோனா தொற்று காரணமாக விளையாட முடியவில்லை. இவர் மொத்தம் 17 சர்வதேச டி20 போட்டிகளில் தான் விளையாடி உள்ளார். நடப்பு ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தீபக் சஹார்: பும்ராவுக்கு மாற்று யார் என்ற ரேஸில் தீபக் சஹார் நிச்சயம் இருப்பார். அவரும் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ரிசர்வ் வீரராக உள்ளார். காயத்திலிருந்து மீண்டு களம் கண்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசி இருந்தார். பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் இவர். பேட் செய்யும் திறன் கொண்டவர். 22 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் 28 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இவர்களை தவிர ஆவேஷ் கான் பெயரையும் இந்திய அணி பரிசீலிக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x