Published : 25 Sep 2022 05:02 AM
Last Updated : 25 Sep 2022 05:02 AM
ஹைதராபாத்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. மழை காரணமாக 8 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் 91 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 4 பந்துகளை மீதம் வைத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 எனசமநிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி ஹைதராபாத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. 2-வது ஆட்டத்தில் குறைந்த ஓவர்களே என்ற போதிலும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடினார். 20 பந்துகளில் 46 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இதேபோன்று இறுதிக்கட்டத்தில் 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் இரு பந்துகளையும் சிக்ஸர், பவுண்டரிக்கு விரட்டிய தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒரு முறை விளாசக்கூடும்.
அதேவேளையில் பந்து வீச்சில் அக்சர் படேல் அற்புதமாக செயல்பட்டிருந்தார். 2 ஓவர்களை வீசிய அவர், 13 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான பெரிய வித்தியாசமாக அக்சர் படேலின் செயல் திறன் அமைந்திருந்தது. பும்ராவும் ஒரு சில யார்க்கர்களை நேர்த்தியாக வீசினார். ஹர்ஷால் படேல், யுவேந்திர சாஹல் ஆகியோர் மட்டுமே தடுமாறி வருகின்றனர். டி 20உலகக் கோப்பை நெருங்குவதால் இவர்கள், உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT