Published : 25 Nov 2016 08:43 PM
Last Updated : 25 Nov 2016 08:43 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 138 ரன்கள் விளாசினார்.
அடிலெய்டில் பகலிரவாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 76 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டு பிளெஸ்ஸிஸ் 118, ஸ்டீபன் குக் 40 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹஸல்வுட் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 3, ரென்ஷா 8 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரென் ஷா 10, டேவிட் வார்னர் 11, கேப்டன் ஸ்மித் 59, ஹேன்ட்ஸ்கோம்ப் 54, மெடின்சன் 0, மேத்யூவ் வேட் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நிலைத்து நின்று விளையாடிய உஸ்மான் கவாஜா 197 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 5-வது சதத்தை நிறைவு செய்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 102 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. கவாஜா 138, மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கைல் அபாட் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்கிறது.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் 3 அறிமுக பேட்ஸ்மென்களில் தொடக்க வீரர் ரென்ஷா நிலைக்கவில்லை, ஹேண்ட்ஸ்கோம்ப் 54 ரன்களை எடுத்தார், மேடின்சன் ரன் எடுக்காமல் ரபாடாவின் சீறும் யார்க்கருக்கு ஸ்டம்ப்களை இழந்தார், கடும் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் ஸ்டம்புகளை விட்டார் மேடின்சன், இவரைத்தான் ஸ்மித் கேம் பிரேக்கர் என்றார் ஆனால் ரபாடா ஸ்டம்ப் பிரேக்கர் ஆகிவிட்டார் இன்று.
ஸ்மித் இறங்கியவுடன் ரபாடாவின் பவுன்சரை மிக ஆக்ரோஷமாக ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்தார், சில வேளைகளில் சச்சினுக்கு ஒரு ஆக்ரோஷம் ஏற்படுமே அப்படிப்பட்ட ஆக்ரோஷம் இது. தொடர்ந்தும் பிரச்சினையில்லாமலே அவர் ஆடிவந்தார், ஆனால் 46 ரன்களில் டுமினி பந்தில் எட்ஜ் செய்ய ஸ்லிப்பில் ஆம்லா கேட்சைக் கோட்டை விட்டார். ஆனால் 59 ரன்களில் தப்ரைஸ் ஷம்சி பந்தை பாயிண்டில் தட்டி விட்டு ஒரு ரன்னிற்கு கவாஜாவை அழைத்தார், கவாஜா ஓடுவது போல் செய்து விட்டு நின்று விட்டார், நோ என்றார் ஆனால் அதற்குள் ஸ்மித் அரை கிரவுண்ட் வந்து விட்டார், திரும்ப முடியவில்லை ரன் அவுட் ஆனார். கேப்டனை ரன் அவுட் செய்த தவறை உணர்ந்த கவாஜா தனது விக்கெட்டை இழக்காமல் 138 ரன்கள் எடுத்தார், ஆஃப் திசையில் அருமையான ஷாட்களையும் லெக் திசையில் அருமையான் புல்ஷாட்களையும அடி கவாஜா 138 ரன்களில் 12 பவுண்டரிகளை அடித்தார். இது இவரது 5-வது டெஸ்ட் சதமாகும்.
ஹேண்ட்ஸ்கோம்ப் தனது பேட்டிங்கில் கிரீசிற்குள் நன்றாக உள்ளே நின்று ஆடினார். ஸ்பின்னர்களை மேலேறி வந்து ஆடினார். கடைசியில் நல்ல அரைசதம் எடுத்த பிறகு கைல் அபாட் புதிய பந்தை மிக அருமையாக உள்ளே ஸ்விங் செய்ய பவுல்டு ஆனார். மேத்யூ வேட், பிலாண்டரை எட்ஜ் செய்து வெளியேறினார். கைல் அபாட்டை ஒன்றும் செய்ய முடியவில்லை 25 ஓவர்கள் வீசி 11 மெய்டன்கலுடன் அவர் 38 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரபாடா, பிலாண்டர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர், ஆஸ்திரேலியா 307/6 என்ற நிலையில் 48 ரன்கள் முன்னிலை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT