Published : 23 Sep 2022 11:05 PM
Last Updated : 23 Sep 2022 11:05 PM
நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியதுடன் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய வீரர்கள் பின்ச், க்ரீன் களம்புகுந்தனர். க்ரீன் இரண்டாவது ஓவரே ரன் அவுட் செய்யப்பட, அடுத்த வந்த டாப் ஆர்டர் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். என்றாலும், பின்ச் 31 ரன்கள் சேகரித்து வெளியேறினார். கடந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய மேத்யூ வாட் அதே பார்மை மீண்டும் மெயின்டெயின் செய்தார். ஹர்ஷல் படேல் வீசிய இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்களை அவர் விளாச, 8 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது. அக்சர் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
91 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா சிறப்பான ஓப்பனிங் கொடுத்தார். முதல் ஓவரே இரண்டு சிக்ஸர் அடித்த அவர், பந்துகளை எல்லைக்கோட்டு பறக்க விடுவதில் கவனமாக இருந்தார். அவருக்கு பக்கபலமாக விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருக்க, இந்திய அணி 4 ஓவர்களிலேயே 50 ரன்களை எடுத்தது. ஆனால் இந்த இருவரையும் ஆடம் ஜம்பா கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.
ஐந்தாவது ஓவர் வீசிய ஜம்பா, முதல் பந்தில் பவுண்டரி விட்டுக்கொடுத்தாலும், அதற்கடுத்த இரு பந்துகளில் கோலி, சூர்யகுமார் யாதவ்வை அவுட் ஆக்கி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஹர்திக் பாண்டியா கைகொடுக்க தவறினாலும், ரோகித் தனது ஆக்ரோஷத்தை தொடர்ந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில், சாம்ஸ் வீசிய முதல் பந்தை சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்த தினேஷ் கார்த்திக், அடுத்த பந்தை பவுண்டரி அடித்து வெற்றியை வசப்படுத்தினார். கடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது போல், இந்திய அணியும் 4 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றிபெற்று அசத்தியது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT