Published : 23 Sep 2022 05:17 PM
Last Updated : 23 Sep 2022 05:17 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ‘கூல் கேப்டன்’ என ரசிகர்கள் அன்போடு அழைப்பது வழக்கம். களத்தில் அவர் அதிகம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே அதற்குக் காரணம். இந்நிலையில், அதற்கான காரணத்தை விவரித்துள்ளார் தோனி.
பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷா-வாக வரும் நடிகர் ரஜினிகாந்த் அந்தப் பெயருக்கு ஏற்ற வகையில் இருவேறு கேரக்டர்களில் வாழ்ந்திருப்பார். ஒன்று சாந்த சொரூபமான மாணிக்கம். மற்றொன்று பம்பாய் நகரில் டானாக வலம் வரும் பாட்ஷா கேரக்டர். இதில் களத்தில் தோனியின் செயல்பாடு மணிக்கத்தை போல இருக்கும். ‘உங்களுக்கு கோபமே வராதா?’ என ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு அது இருக்கும். இப்போது அதற்கு தனது ஸ்டைலில் பதில் கொடுத்துள்ளார் தோனி. ஒரு நிகழ்வில் கலந்துகொண்டபோது இதனை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் களத்தில் நாங்கள் எந்தத் தவறும் செய்யக் கூடாது என எண்ணுவோம். அது மிஸ் ஃபீல்ட், கேட்ச் வாய்ப்பை நழுவ விடுவது அல்லது வேறேதேனும் தவறு போன்றவற்றை சொல்லலாம். அப்படியும் வீரர்கள் களத்தில் ஏதேனும் தவறு செய்யும்போது அங்கு கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை. மைதானத்தில் 40 ஆயிரம் மக்கள் போட்டியை பார்த்து கொண்டிருக்கிறார்கள். டிவி போன்ற மீடியத்தின் வழியே கோடான கோடி பேரும் பார்த்து வருகின்றனர். நான் எப்போதும் அந்த வீரர் ஏன் தவறு செய்தார். அதற்கான காரணம் என்ன என்பதை அவரது கண்ணோட்டத்தில் நின்று பார்ப்பேன்.
அந்த வீரர் 100 சதவீதம் அந்த கேட்ச்சை பிடிக்க முயன்று, அதைத் தவறவிட்டிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அதே நேரத்தில் பயிற்சியின்போது அவர் எத்தனை கேட்ச் பிடித்தார் என்பதையும் கருத்தில் கொள்வேன். அவருக்கு அதில் ஏதேனும் சிக்கல் இருந்து, அதற்கு தீர்வு காண நினைதால் ஓகே. நான் எப்போதும் இந்த மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்துவேன். அந்த கேட்ச் வாய்ப்பை மிஸ் செய்த காரணத்தால் ஆட்டத்தை இழந்திருந்தாலும் நான் இதைத்தான் பார்ப்பேன்.
நானும் மனிதன்தான். உங்களுக்குள் இருக்கும் உணர்வுகள் எனக்குள்ளும் இருக்கிறது. நாம் நமது நாட்டுக்காக விளையாடுகிறோம். அதனால், சில நேரங்களில் அந்தத் தவறுகள் மோசமானதாக இருக்கும். என்ன, அதை நான் வெளிக்காட்டாமல் இருப்பேன்.
வெளியில் உட்கார்ந்து கொண்டு யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இப்படி விளையாடி இருக்க வேண்டும். அப்படி செய்திருக்க வேண்டும் என. விளையாட்டில் ஏற்றமும், இறக்கமும் இருக்கத்தான் செய்யும். நாம் எப்படி நமது நாட்டுக்காக விளையாடுகிறோமா அதுபோல தான் எதிரணி வீரர்களும்” என தோனி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT