Published : 21 Nov 2016 03:54 PM
Last Updated : 21 Nov 2016 03:54 PM
விசாக்கப்பட்டணத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றதையடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்ற கேப்டன் விராட் கோலி, அறிமுக வீரர் ஜெயந்த் யாதவ்வின் அணுகுமுறையைப் பாராட்டினார்.
ஆட்டம் முடிந்து பரிசளிப்பு விழாவில் விராட் கோலி கூறியதாவது:
இது எனக்கு அதிர்ஷ்டமான மைதானமாக வைசாக் விளங்குகிறது. அடிலெய்ட் மைதானத்தை எப்படி உணர்கிறேனோ அதே போல் இந்த மைதானமும் எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது.
நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டியை ரசிப்பது நம்மை உற்சாகமான ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை ஆட உத்வேகமளிக்கிறது. 5 செஷன்கள் ஆடுவது 450க்கும் கூடுதலாக ரன்களை எடுப்பது என்பதில் தெளிவாக இருந்தோம். அதன் பிறகு பவுலர்கள் அருமையாக வீசினர்.
பிட்சில் அதிகமாக எதுவும் நடக்கவில்லை. ஆனால் பேட்ஸ்மென்கள் சரணடைந்தனர். என் பேட்டிங்கைப் பொறுத்தவரை நான் பந்துகளை நன்றாக அடிப்பதாகவே உணர்கிறேன். மிகப்பெரிய ‘பாசிட்டிவ்’ என்னவெனில் பவுலர்களின் செயல்பாடு, ஜெயந்த் யாதவின் அறிமுகப் போட்டி ஆட்டம். அவரது பங்களிப்புகள் விலைமதிப்பற்றது. அவரைப்பற்றி அவரது ஆட்டம் நிறைய பேசுகிறது.
ஒரு இளம் வீரர் என்னிடம் வந்து தனக்கு என்ன மாதிரியான கள வியூகம் அமைக்க வேண்டுமென்று என்னிடம் கூறுவது பாராட்டுக்குரியது. அதாவது தான் என்ன வீசப்போகிறோம் என்பதை அவர் தெளிவாக அறிந்திருப்பதையும் தன்னம்பிக்கையையும் இது காட்டுகிறது. பேட்ஸ்மென்கள் அவருக்கு எதிராக சிரமப்பட்டனர். விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 5 பவுலர்கள் இருப்பது அருமையான ஒரு விஷயம். நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நாங்கள் இதனுடன் திருப்தியடைய விரும்பவில்லை. அதே வேளையில் துணிச்சலாகவும் இருக்க விரும்பவில்லை. நாங்கள் இங்கிலாந்து அணியை நிரம்பவும் மதிக்கின்றோம்.
இவ்வாறு கூறினார்.
இங்கிலாந்து கேப்டன் அலஸ்டைர் குக்:
கடினமாக ஆடி சவால் அளித்தது மிகப்பெரிய தருணமாக இருந்தது, ஆனால் கடைசியில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளிக்கிறது. முதல் நாள் பேட்டிங் மிகச்சுலபமாக இருந்ததாகவே கருதுகிறோம். அதன் பிறகு கடினமாக மாறியது.
டாஸ் வென்றது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்தது. இதில் சந்தேகமில்லை. முதல் இன்னிங்ஸிற்குப் பிறகே நாங்கள் போராடினோம்.
இந்திய அணியை கடினமாக உழைத்து ஆட பணித்தோம், எளிதாக விட்டுவிடவில்லை என்பது திருப்திகரமாக உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் சில கட்டங்களில் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.
இரண்டு போட்டிகளில் வென்று மீண்டும் நாங்கள் எங்களை நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார் குக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT