Published : 18 Nov 2016 07:21 PM
Last Updated : 18 Nov 2016 07:21 PM
கொலின் டி கிராண்ட்ஹோம் என்ற அறிமுக வலது கை வேகப்பந்து வீச்சாளர் நியூஸிலாந்து அணிக்காக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 133 ரன்களுக்குச் சுருண்டது.
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் ரத்தாக, 2-ம் நாளான இன்று பசுந்தரை, வேகப்பந்து வீச்சு சாதக ஆட்டக்களத்தில் பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார் கேன் வில்லியம்சன், 41 ரன்களுக்கு கொலின் டி கிராண்ட்ஹோம் 6 விக்கெட்டுகளை வீழ்த்த சவுதி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த பாகிஸ்தான் 133 ரன்களுக்கு 55.5 ஓவர்களில் சுருண்டது.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் மற்றொரு அறிமுக தொடக்க வீரர் ஜே.ஏ.ராவல் 55 ரன்களுடனும் நிகோல்ஸ் 29 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
இன்றைய அறிமுக நாயகனான கொலின் டி கிராண்ட்ஹோம் (30 வயது), ஜிம்பாப்வேயில் பிறந்தவர். இவர் ஒரு ஆல்ரவுண்டர். இவர் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சிக்சர்களுக்குப் பெயர் பெற்றவர். இவர் எடுத்த 6 விக்கெட்டுகள் அறிமுக போட்டியில் நியூஸிலாந்து கிரிக்கெட்டில் புதிய சாதனையாகும்.
இந்த கிரீன் டாப் பிட்சில் பொறுமையாக ஆட வேண்டும், ஆனால் பாகிஸ்தான் பேட்ஸ்மென்கள் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் பிட்ச் அச்சுறுத்தலை எதிர்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கலாம். முதல் விக்கெட்டுக்காக சமி அஸ்லம் (19), அசார் அலி (15) சேர்ந்து 31 ரன்கள் சேர்த்தனர். அதாவது ஒரு 75 பந்துகளைக் கடத்தினர். காரணம் டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் தொடக்க ஓவர்களை சரியாக வீசவில்லை, ஓவர் ஸ்விங்கை எதிர்பார்த்து சில பந்துகள் லெக் திசையில் சென்றன.
அதன் பிறகு நீல் வாக்னருக்கு முன்னதகா கொலின் டி கிராண்ட்ஹோமின் ஸ்விங் பவுலிங்கை நாடினார் கேன் வில்லியம்சன். ஆனால் இவரும் முதல் 2 ஓவர்களை சரியாக வீசவில்லை. 3-வது ஓவரில் இன்ஸ்விங்கரில் அசார் அலியை பவுல்டு செய்தார். மறுமுனையில் சவுதி, சமி அஸ்லமின் எட்ஜைப் பிடித்தார். பாபர் ஆசம் 7 ரன்களிலும் யூனிஸ் கான் 2 ரன்களிலும் டி கிராண்ட் ஹோமிடம் வீழ்ந்தனர். இதில் யூனிஸ் கான் ஆடிய ஷாட் அதீத தன்னம்பிக்கை என்றே கூற வேண்டும். பாகிஸ்தான் 56/4 என்று ஆனது. பிறகு மிஸ்பா உல் ஹக், ஆசாத் ஷபிக் இணைந்து 32 ரன்கள் சேர்த்தனர். அதன் பிறகு 16 ரன்களில் கிராண்ட் ஹோமிடம் வீழ்ந்தார் ஆசாத் ஷபிக். சர்பராஸ் அகமது மந்தமாக சவுதியை ஒரு ஷாட் ஆடி கல்லியில் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார்.
மிஸ்பா உல் ஹக் 31 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் 133 ரன்களுக்குச் சுருண்டது, கொலின் டி கிராண்ட்ஹோம் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் டாம் லேதம் 19 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்து ஆமிர் பந்தில் எல்.பி.ஆனார். கேன் வில்லியம்சன் 4 ரன்களிலும் டெய்லர் 11 ரன்களிலும் சொஹைல் கான் மற்றும் ரஹத் அலியிடம் வீழ்ந்தனர்.
மற்றொரு தொடக்க வீரரான ராவல் முதல் டெஸ்ட்டில் ஆடுகிறார், ஆனால் இவரது உறுதியாலும் நிகோல்ஸின் தடுப்பாட்டத்தினாலும் 104/3 என்று இந்த நாளை முடித்தது நியூஸிலாந்து. ராவல் அறிமுக டெஸ்ட் போட்டியில் கடினமான பந்து வீச்சிற்கு எதிராக, கடினமான பிட்சில் 55 நாட் அவுட். நிகோல்ஸ் 29 நாட் அவுட்.
மொகமது ஆமிர் தனது 11 ஓவர்களில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே கொடுத்தார். சனிக்கிழமை ஆட்டத்தின் 3-ம் நாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT