Published : 16 Sep 2022 08:40 PM
Last Updated : 16 Sep 2022 08:40 PM

துலீப் கோப்பை | பவுலர் வீசிய பந்தால் காயமடைந்த வெங்கடேஷ் ஐயர்: களத்திற்கு வந்த ஆம்புலன்ஸ்

கோவை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை நோக்கி மேற்கு மண்டல அணியின் பவுலர் வெறித்தனமாக பந்தை எறிந்ததால் அவர் காயம் அடைந்துள்ளார்.

இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் முதல் தர கிரிக்கெட் போட்டித் தொடரான துலீப் கோப்பை தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு சீசனுக்கான தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அரையிறுதி சுற்றை எட்டியுள்ள நிலையில், மேற்கு மற்றும் மத்திய மண்டல அணிகள் அரையிறுதி போட்டியில் விளையாடி வருகின்றன.

கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், மேற்கு மண்டல அணி இன்னிங்ஸில் 257 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய மத்திய மண்டல அணி 128 ரன்களில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கு மண்டலம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், மத்திய மண்டல அணிக்காக விளையாடி வருகிறார். மேற்கு மண்டல அணியின் பவுலர் கஜா வீசிய பந்தை சிக்ஸராக எல்லைக் கோட்டுக்கு அப்பால் பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர், தொடர்ந்து அடுத்த பந்தை தடுப்பாட்ட முறையில் அணுகினார். அந்த பந்து நேராக பவுலர் கஜா வசம் செல்ல, விரக்தி அடைந்த அவர் அதனை பிடித்து, ஐயரை நோக்கி வேகமாக எறிந்தார்.

அது ஐயரின் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியை தாக்கியதால், வலி தாங்க முடியாமல் அவர் சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக களத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தது. பிசியோ நிபுணரும் பரிசோதித்தார். இதையடுத்து, சில நிமிடங்களில் எழுந்து நின்ற ஐயர், காயம் காரணமாக வெளியேறினார். பின்னர், வலியைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் பேட் செய்ய வந்த வெங்கடேஷ் ஐயர், வெறும் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x