Published : 09 Nov 2016 06:08 PM
Last Updated : 09 Nov 2016 06:08 PM

ரூட் அபார சதம்; மொயின் அலி 99 பேட்டிங்: இங்கிலாந்துக்கு வலுவான முதல் நாள் ஆட்டம்

ராஜ்கோட்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்துள்ளது.

ஏகப்பட்ட விரிசல்கள் உள்ள பிட்ச், இந்தியா பேட்டிங் செய்யும் போது நிச்சயம் சீரற்ற பவுன்ஸ் உள்ள பிட்சாக மாறும் போது சிக்கல் எழ வாய்ப்புள்ளது.

ஆட்ட முடிவில் மொயின் அலி 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 19 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், முன்னதாக தனது அனாயசமான, தங்குதடையற்ற ஆட்டத்தினால் 180 பந்துகளில் 11 பவுண்டரிக்ள் 1 சிக்சருடன் 124 ரன்களை எடுத்து உமேஷ் யாதவ் பவுலிங்கில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதாவது மைக்கேல் கிளார்ல் 2013 தொடரில் இந்தியாவில் சதம் எடுத்த பிறகு வருகை தரும் அணி வீரர் ஒருவர் சதம் எடுத்த வகையில் ஜோ ரூட் முதன்மை வகிக்கிறார். மொயின் அலி நாளை சதம் எடுத்தால் 2-வது வீரர் என்ற பெருமையை ஈட்டுவார். நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகள் செய்யாததை இங்கிலாந்து செய்துள்ளது, அதாவது 300 ரன்களைக் கடந்து இன்னமும் 6 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருப்பதாகும்.

முதல் அரைமணி நேரத்தில் ரஹானே, கோலி, விஜய் கேட்ச்களை கோட்டை விட்ட பிறகு 102/3 என்று இருந்த இங்கிலாந்து அணியை ஜோ ரூட், மொயின் அலி 179 ரன்களைச் சேர்த்து வலுப்படுத்தினர். இருவரும் உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை இடையே விக்கெட்ட்டை இழக்காமல் ஆடினர். கோலியின் கேப்டன்சியில் இப்போதுதான் முதல் முறையாக டாஸை இழந்துள்ளார். கங்குலி கூறியது போல் இத்தகைய முதல் நாள் பிட்ச்களில் அஸ்வின், ஜடேஜா நன்றாக வீசக் கற்றுக் கொள்வது அவசியம்.

அறிமுக தொடக்க வீரர் ஹமீத் (31) ஒரு கிளாசிக் டெஸ்ட் பேட்ஸ்மெனாகவும் அதே வேளையில் ஸ்லிப் தலைக்கு மேல் தூக்கி அடிக்கத் தயங்காதவராகவும் உள்ளார். அஸ்வின் ஜடேஜாவை நன்றாக ஆடினார். வேகப்பந்து வீச்சில் அவரது கால் நகர்த்தல்கள் ஐயத்திற்கிடமாக இருந்தாலும் 19 வயதான இவர் போகப்போக தேறி விடுவார் என்றே தோன்றுகிறது.

21 ரன்கள் எடுத்து இன்னொரு படுத்தல் இன்னிங்சிற்குத் தயாரான குக்கை ஜடேஜா எல்.பி. செய்தார், ஆனால் இது சுத்தமாக நாட் அவுட். அவர் ரிவியூ செய்திருக்கலாம் ஆனால் அறிமுக வீரர் ஹமீதின் பேச்சைக் கேட்டு அவர் ரிவியூ செய்யாமல் அவுட்டை ஏற்றுக்கொண்டு தவறிழைத்தார்.

அதே போல் அஸ்வின் ரவுண்ட் த விக்கெடிலிருந்து சாய்வுக் கோணத்தில் ஒரு பந்தை வீச கால்காப்பில் வாங்கினார் ஹமீத் அது கிளீன் எல்.பி. ஆனால் இம்ம்முறை ரன்னர் முனையில் இருந்த ஜோ ரூட், ரிவியூ செய்யுமாறு அறிவுறுத்தினார், அது பெரிய தவறில் முடிந்தது.

இடது கை வீரர் பென் டக்கெட் அஸ்வினுக்கு எதிராக நல்ல உத்தியைக் கடைபிடித்தார், அவர் லெக் ஸ்டம்புக்கு நேராக நின்று தனது வலது காலை குறுக்காக போடாமல் ஆடி எல்.பி. வாய்ப்பைத் தவிர்த்ததோடு, இருமுறை அஸ்வினை ஸ்வீப் பவுண்டரியும் ஒரு கவர் பவுண்டரியும் விளாசி 13 ரன்களில் ஆடி வந்த போது அஸ்வின் பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அஸ்வின், ஜடேஜா இருவருமே ஜோ ரூட், மொயின் அலி ஆகியோருக்கு முழு லெந்திலும் சில வேளைகளில் புல்டாசாகவும் வீசினர். ஜோ ரூட் குறிப்பாக அஸ்வினை மிட்விக்கெட்டில் அடித்த பவுண்டரியும் எக்ஸ்ட்ராகவரில் அடித்த பவுண்டரியும் அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தது.

அஸ்வின் 18 ஓவர்களை தொடர்ந்து வீசினாலும் ஜோ ரூட்டிடமிருந்து ஒரு தவறான ஷாட்டை கூட தூண்ட முடியவில்லை. 72 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்த ஜோ ரூட், பிறகு 154 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார். 124 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜோ ரூட். இதில் சிறு டிராமா அரங்கேறியது, கேட்சை பிடித்த உமேஷ் யாதவ் அதைக் கொண்டாடும் விதமாக உடனடியாக தலைக்கு மேல் தூக்கி எறியும் வழக்கத்தில் பந்தை அவர் பிடிக்கவில்லையோ என்ற ஐயம் ஜோ ரூட்டுக்கு எழ விஷயம் 3-ம் நடுவரிடம் சென்று பிறகு அவுட் தீர்ப்பளிக்கப்பட்டது.

பென் ஸ்டோக்ஸ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 19 ரன்கள் எடுத்தும் மொயின் அலி 192 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தும் ஆடி வருகின்றனர். பந்து வீச்சைப் பொறுத்தவரை அஸ்வின் ‘சதம்’ அடித்துள்ளார். அமித் மிஸ்ரா 10 ஓவர்கள் வீசினார் ஆனால் ஒன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஜடேஜா 59 ரன்களுக்கு 1 விக்கெட் என்று சிக்கனம் காட்டினார்.

நாளை 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் நீண்ட பேட்டிங் லைன் அப் நிச்சயம் 400 ரன்களை நோக்கி செல்ல முயலும். அப்படி அதில் வெற்றி பெற்றால், இந்திய அணிக்கு உடையும் பிட்சில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x