Last Updated : 07 Nov, 2016 06:05 PM

 

Published : 07 Nov 2016 06:05 PM
Last Updated : 07 Nov 2016 06:05 PM

டெஸ்ட் 1 - ஆஸி.யை அபாரமாக வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 விக்கெட்கள் வீழ்த்திய காகிஸோ ரபாடா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

பெர்த்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 242 ரன்களும், ஆஸ்திரேலியா 244 ரன்கள் எடுத்தன. 2 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 160.1 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 540 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டுமினி 141, டீன் எல்கர் 127, பிலாண்டர் 73, குயிண்டன் டி காக் 64 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து 539 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 55 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா 58, ஷான் மார்ஷ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஷான் மார்ஷ் 15, டேவிட் வார்னர் 35, ஸ்டீவ் ஸ்மித் 34, ஆடம் வோஜஸ் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

கைவசம் 6 விக்கெட்களுடன் வெற்றிக்கு 370 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலியா சந்தித்தது. 26 ரன்களில் மார்ஷை ரபாடா வெளியேற்றினார். கவாஜா-மார்ஷ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.

அடுத்த வந்த விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் பொறுமையாக விளையாடினார். கவாஜாவுடன் இணைந்து அவர் 6-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தார். சதத்தை நெருங்கிய நிலையில் டுமினி பந்தில் எல்பிடபிள்யூ ஆனால் கவாஜா. 253 பந்துகளை சந்தித்த கவாஜா 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 13, பீட்டர் சிடில் 13, ஹஸல்வுட் 29, நாதன் லயன் 8 ரன்களில் நடையை கட்ட 119.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 361 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பீட்டர் நெவில் 60 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். பிலாண்டர், டுமினி, கேசவ் மகராஜ், டெம்பா பவுமா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 12-ம் தேதி ஹோபர்ட்டில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து ஒயிட்வாஷ் பெற்ற நிலையில் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் தொடரையும் தோல்வியுடன் தொடங்கி உள்ளது.

பெர்த் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு இந்த சீசனில் முதல் ஆட்டமாக அமைந்திருந்தது. 1988-க்கு பிறகு அந்த அணி சீசனின் முதல் போட்டியில் தற்போதுதான் தோல்வி கண்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெயின் காயம் அடைந்த போதிலும் இளம் வீரரான ரபாடா தனது புயல் வேகத்தால் ஆஸ்திரேலிய அணியை சாய்த்துள்ளார்.

9 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடி உள்ள 21 வயதான ரபாடா 5 விக்கெட்களை கைப்பற்றுவது இது 5-வது முறையாகும். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க வீரர்களில் இளம் வயதில் இந்த சாதனையை படைத்த வீரர் என்ற பெருமையை ரபாடா பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x