Published : 28 Oct 2016 03:06 PM
Last Updated : 28 Oct 2016 03:06 PM
ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் கேப்டன்சி காலக்கட்ட பிரச்சினைகளை அலசி எழுதும் போது “நச்சுக் கலாச்சாரம்’ பரவியது என்று கடுமையாக சாடியுள்ளார்.
தனது ‘Resilient’ என்ற சுயசரிதை நூலில், பாண்டிங் சென்ற பிறகே கிளார்க் தலைமையில் அணியில் கடும் கோஷ்டிகள் உருவானதால் சில வீரர்கள் விளையாடுவதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்று எழுதி அதிர்ச்சி அலை பரப்பியுள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ஜான்சன் கூறும்போது, “பாண்டிங்கிற்குப் பிறகு நடைமுறைகள் மிகவும் மாறியது. அணியில் நிறைய குழுக்கள் உருவாகின. பலதரப்பட்ட சிறு கோஷ்டிகள் இருந்தன. மொத்தத்தில் ஒரு நச்சுக்கலாச்சாரம் பரவியது.
இந்த நச்சுக் கலாச்சாரம் மெதுவே வளர்ந்தது, அனைவரும் அதன் தாக்கங்களை வெளிப்படையாக உணர முடிந்தது. ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகிழ்ச்சியாக இருப்பதற்கான இடமாக இல்லாமல் மாறியது ஓய்வறை கலாச்சாரம். ஒருவர் நாட்டுக்காக ஆடும் போது கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக ஆட வேண்டும் அனால் கிளார்க்கின் தலைமையில் ஓய்வறையே நாராசமாக மாறிவிட்டது.
அது ஒரு மோசமான அனுபவம், மோசமான காலக்கட்டம், எங்களில் ஒரு சிலர் விளையாடவே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு அது சென்றது. அணிக்கு வந்த இளம் வீரர்கள் கூட அவர்களுக்கும் கேப்டனுக்கும் அணிக்கும் காத தூரம் இடைவெளி இருந்ததாகவே உணர்ந்தனர். மாநில கிரிக்கெட் இதைவிட நல்ல நிலையில் நல்ல சூழலில் இருப்பதாக அவர்கள் கருதினர்.
இவ்வாறு ஜான்சன் கூறினார்.
முன்னதாக மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சனை “அணியின் புற்று நோய்” என்று வர்ணித்ததும், பல வீரர்களைப் பற்றி அவர் தெரிவித்திருந்த மோசமான கருத்துகளுக்குப் பதிலடியாக தற்போது மிட்செல் ஜான்சன், கிளார்க் காலக்கட்டத்தை “நச்சு சூழல்” என்று வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ், பயிற்சியாளர் ஜான் புகானன் மோசமான ஒரு பண்பாட்டை ஆஸ்திரேலியர்களிடம் வளர்த்ததாக ஷேன் வார்ன் கடுமையாக சாடியது போலவே தற்போது கிளார்க், மிக்கி ஆர்தர் காலக்கட்டத்தை ‘நச்சுக் கலாச்சாரம்’ என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT