Published : 10 Sep 2022 07:04 AM
Last Updated : 10 Sep 2022 07:04 AM

அமெரிக்க ஓபன்: இறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக், ஆன்ஸ் ஜபிர்

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் துனிசியாவின் இகா ஸ்வியாடெக்.

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிசியாவின் ஆன்ஸ் ஜபிர் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் அரினா சபலெங்காவை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட்டை ஸ்வியாடெக் 3-6 என இழந்தார்.

எனினும் அடுத்த செட்டில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தி 6-1 என கைப்பற்றினார். வெற்றியை தீர்மானித்த கடைசி செட்டில் சிறப்பாக செயல்பட்ட ஸ்வியாடெக் இந்த செட்டை 6-4 என கைப்பறினார். முடிவில் 2 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக அமெரிக்க ஓபன் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஆன்ஸ் ஜபிருடன் மோதுகிறார் இகா ஸ்வியாடெக். ஆன்ஸ் ஜபிர் அரை இறுதி சுற்றில் 17-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவை 6-1, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக தோற்கடித்தார்.

இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 6 நிமிடங்களில் முடிவடைந்தது. இதன்மூலம் அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்கிற பெருமையை பெற்றுள்ளார் ஆன்ஸ் ஜபிர். கடந்த ஜூலையில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் இறுதிச்சுற்றிலும் விளையாடியிருந்தார் ஆன்ஸ் ஜபிர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x