Published : 18 Jun 2014 11:45 PM
Last Updated : 18 Jun 2014 11:45 PM

பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நெதர்லாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவின் மட்டற்ற சவாலையும் மீறி நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பு இரு அணிகள் கையிலும் மாறிமாறி வந்தது. முதலில் நெதர்லாந்து கோல் அடிக்க அடுத்த நிமிடமே ஆஸ்திரேலியா சமன் செய்ய, பிறகு பெனால்டி வாய்ப்பில் ஆஸ்திரேலியா 2வது கோல் அடித்து முன்னிலை பெற உடனேயே நெதர்லாந்து சமன் செய்ய, ஆஸ்திரேலியா முன்னிலை பெறும் வாய்ப்பை கோட்டைவிட கடைசியில் நெதர்லாந்து 3வது கோலை அடித்து கடினமான வெற்றியைச் சாதித்தது.

ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது, டேவிட்ஸன் ஒரு பந்தை காஹிலிடம் அடிக்க அது ஆஸ்திரேலியா சார்பாக ஃப்ரீக்கில் முடிந்தது. ஆனால் பிரீகிக்கினால் எந்த பலனும் ஏற்படவில்லை.



5வது நிமிடத்தில் அன்றைய நாயகன் ரூபென் இடது புறம் பந்தை வேகமாக எடுத்துச் சென்றார். ஆனால் ஆஸ்திரேலியா கோல் எல்லைக்குள் ஊடுருவும் முன்னர் ஆஸ்திரேலிய வீரரால் தடுக்கப்படுகிறார். பந்தை இழந்தார் ரூபென்.



பிறகு 16வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. நெதர்லாந்து வீரர் டீ குஸ்மான் பந்தின் கட்டுப்பாட்டை இழக்க பந்து ஆஸ்திரேலிய வீரர் லெக்கியிடம் சென்றது. அவர் ரெஷியானோவிடம் அடித்தார். அவர் ஷூட் செய்யும் முன்பாக தடுக்கப்பட்டார். கார்னர் வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்தது.. ஆனால் கார்னர் கோலாக மாறவில்லை.

ரூபென் அடித்த முதல் கோல்:

20-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பந்தின் கட்டுப்பாட்டை இழக்க அர்ஜென் ரூபனிடம் பந்து வருகிறது. கிட்டத்தட்ட அரை மைதானத்திலிருந்து தனி நபராக ரூபென் பந்தை எடுத்துச் சென்று ஆஸ்திரேலிய கோல் அருகில் சென்றார். ஆஸ்திரேலிய வீரர் அதுவரை யாரும் வரவில்லை, கடைசியாக ஸ்பிரானோவிச் ரூபெனைத் தடுக்க முடிவதற்குள் ரூபென் அபாரமாக அதனை கோலுக்குள் செலுத்தினார். நெதர்லாந்து 1-0 என்று முன்னிலை வகித்தது.

ஆஸ்திரேலியா சமன்:



அதற்கு அடுத்த நிமிடத்திலேயே நெதர்லாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலிய கோல் கீப்பர் அடித்த கிக்-ஆஃப் ஷாட் நடுக்களத்தில் காத்துக் கொண்டிருந்த ரெசியானோ வலது புறம் காத்திருந்த லெக்கியிற்கு பாஸ் செய்தார். அவர் நெதர்லாந்து நெருக்கடியையும் மீறி பந்தை ஆஸ்திரேலியாவின் காஹிலுக்கு அடித்தார். பந்து தாழ்வாக இறங்கியது. அது தரையில் படும் முன்பே காஹில் அபாரமாக அதனை இடது காலால் பலமான ஒரு உதை உதைக்க பந்து கோலுக்குள் செல்கிறது. ஆஸ்திரேலிய ரசிகர்கள் உற்சாகத்தில் எழுச்சிபெற 1-1 என்று சமன் செய்தது அந்த அணி. நெதர்லாந்து அதிர்ச்சியடைந்தது.



ஆஸ்திரேலிய அணிக்காக அதிக கோலை அடித்த காஹில் சமன் செய்த அந்த கோல் இந்த உலகக்கோப்பையின் சிறந்த கோல்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை.பிறகு 31வது நிமிடத்திலும் ஆஸ்திரேலிய ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ரெஷியானோ அபாரமாக பந்தைக் கடத்தி வந்து நெதர்லாந்து கோல் நோக்கி ஒரு ஷாட்டை அடித்தார். பாருக்கு மேல் சென்றது.

பிறகு 33வது நிமிடத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு ஃப்ரீகிக் மூலம் கோல் வாய்ப்பு வந்தது. ஆனால் ஷாட் சக்திவாய்ந்ததாக இல்லாமல் போனதால் தடுக்கப்பட்டது.



தொடர் ஃபவுலினால் மஞ்சள் அட்டை:



43வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சோகமான விஷயம் நிகழ்ந்தது. நெதர்லாந்து வீரர் மார்டின்ஸ் இண்டியை கோல் அடித்த காஹில் தேவையில்லாமல் இடையூறு செய்ய அவருக்கு அடிபட்டு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். காஹிலுக்கு மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டது. இதனால் அடுத்ததாக ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் காஹில் களமிறங்க முடியாது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.



இடைவேளைக்குப் பிறகு நெதர்லாந்திற்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. 47வது நிமிடத்தில் வான் பெர்சியும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்பிரானோவிச்சிற்கும் பந்தை எடுத்துச் செல்வதில் மோதல் ஏற்பட வான் பெர்சி அவரது கையால் அவரைத் தடுக்க மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டது. இதனால் வான் பெர்சியும் அடுத்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையிலிருந்து ஆட்டத்தை தொடர்ச்சியாக பின் தொடர முடியாத அளவுக்கு இரு அணிகளும் கடும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தின. சில அபாரமான மூவ்களை இரு அணிகளுமே செய்தாலும் நெதர்லாந்தை ஆஸ்திரேலியா அதிகமாக அச்சுறுத்தியது.



ஆஸ்திரேலியா பெனால்டி கிக்:



அப்படிப்பட்ட ஒருகணத்தில்தான் 54வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா 2வது கோலை அடித்தது. நெதர்லாந்து ரசிகர்கள் வாயடைத்தனர்.

ஆஸ்திரேலிய வீரர் ரெசியானோவுக்குப் பதிலாகக் களமிறக்கப்பட்ட ஆலிவர் பொசானிக் தன்னிடம் வந்த ஒரு பந்தை நெதர்லாந்து பெனால்டி பகுதிக்குக் கொண்டு சென்றார். அங்கு ஒரு ஷாட்டை அடிக்க அது நெதர்லாந்து வீரரின் கையில் பட, பெனால்டி பகுதிக்குள் கையில் வாங்கியதால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய வீரர் ஜெடினாக் மிகுந்த டென்ஷனுடன் பெனால்டி கிக்கை அடித்தார். நெதர்லாந்து கோல் கீப்பர் இடது புறம் டைவ் அடிக்க பந்தோ மாறாக வலது புறம் கோலுக்குள் சென்றது. ஆஸ்திரேலியா 2-1 என்று முன்னிலை பெற்றது.

வான் பெர்சி அபாரம்:

ஆனால் அடுத்த 4வது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ரூபெனிடம் இடதுபுறம் பந்து வர அவர் அதனை எடுத்துச் சென்று பிறகு பக்கவாட்டில் உதைத்தார், அங்கிருந்து வான் பெர்சிக்கு பந்து வருகிறது அவர் அதனை அபாரமாக திரும்பி எடுத்துச் சென்று ஆஸ்திரேலிய கோல் கீப்பர் ரயானைக் கடந்து கோல் அடித்தார். நெதர்லாந்து 2-2 என்று சமன் செய்தது.

ஆனால் ஆஸ்திரேலியா அசரவில்லை, 63வது நிமிடத்தில் இடது புறம் டேவிட்சன் அபாரமாக ஒரு ஷாட்டை ஆட அது நேராக காஹில் தலைக்கு வருகிறது பந்து ஆனால் அவர் கட்டுப்படுத்தி அதனை அடிக்க முடியவில்லை.

தவற விட்ட நல்ல கோல் வாய்ப்பு:

67வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு உண்மையிலேயே ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் ஓவார் என்ற வீரர் பந்தை அபாரமாக எடுத்துச் சென்று நெதர்லாந்து கோல் எல்லைக்குள் சென்றார் அங்கு அவரும் கோல் கீப்பரும்தான் உள்ளனர். அவரே கோலை நோக்கி அடித்திருக்கலாம் ஆனால் அவர் பந்தை பாஸ் செய்ய அது லெக்கி என்ற மற்றொரு ஆஸ்திரேலிய வீரரிடம் வாகாக வரவில்லை அவர் மார்பால் கோலை நோக்கி அடிக்க நெதர்லாந்து கோல் கீப்பர் கிளீசன் அதனை பிடித்து விட்டார். அருமையான வாய்ப்பு தவறவிடப்பட்டது.

நெதர்லாந்தின் வெற்றி கோல்:

தவற விட்டது கூட பெரிய விஷயமில்லை அடுத்த நிமிடமே நெதர்லாந்து 3வது கோலை அடித்ததுதான் ஆஸ்திரேலியாவின் துரதிர்ஷ்டம். நெதர்லாந்து வீரர் டீபே ஆஸ்திரேலிய பாக்ஸிலிருந்து பந்தை எடுத்துச் சென்று கிட்டத்தட்ட அரை மைதானத்திற்கு சற்று முன்னே சென்று தனக்குக் கிடைத்த சிறு இடைவெளியில் வலது காலால் ஆஸ்திரேலிய கோல் நோக்கி சக்தி வாய்ந்த ஒரு புல்லட் ஷாட்டை அடிக்க அது கோலி ரியானைத் தாண்டி கோலாக மாறியது. நெதர்லாந்து 3-2 என்று முன்னிலை பெற்றது.

அதன் பிறகு நெதர்லாந்து வெறி பிடித்தது போல் ஆடியது. ஆஸ்திரேலியாவினால் சமன் செய்ய முடியவில்லை. நெதர்லாந்து 2வது வெற்றியைப் பெற்றது.

ஆனால் ஆஸ்திரேலியா இதே பாணியில் ஆடினால் ஸ்பெயின் அணிக்கே கடினம்தான். இந்த உலகக் கோப்பையின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x