Published : 05 Oct 2016 09:25 PM
Last Updated : 05 Oct 2016 09:25 PM
டர்பனில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது.
தொடரில் நிலைபெற ஆஸ்திரேலியாவுக்கு இதில் வெற்றி பெறுவது முக்கியம். இன்று டேல் ஸ்டெய்னை விளாசித் தள்ளினர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், 10 ஓவர்களில் ஸ்டெய்ன் 96 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்க ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசித் தள்ளப்பட்ட பவுலர் என்ற எதிர்மறை சாதனைக்குரியவரானார் டேல் ஸ்டெய்ன்.
மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ரபாதா 10 ஒவர்களில் 86 ரன்கள் விளாசப்பட்டார். தென் ஆப்பிரிக்க பிட்ச்களும் பேட்டிங் சாதக ஆட்டக்களங்களாக மாற்றப்பட்டுள்ளதை ஸ்டெய்னுக்கு இன்று நடந்த சாத்துமுறை பறைசாற்றுகிறது, பாங்கிசோ ரபாதாவுக்கும் நல்ல அடி.
போட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்த கேப்டன் ஸ்மித் டாஸ் வென்றவுடன் பேட்டிங் என்றார்.
வார்னர், ஸ்மித் அதிரடி சதங்கள்:
வார்னர் 107 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 117 ரன்களையும் கேப்டன் ஸ்மித் 107 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 108 ரன்களையும் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்காக வார்னரும், பிஞ்சும் இணைந்து 13 ஓவர்களில் 110 ரன்களை விளாசினர்.
டேவிட் வார்னர் ஒருநாள் போட்டிகளில் 81 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை எடுத்து மைக்கேல் பெவனுக்கு அடுத்தபடியாக அதிவேக 3000 ஒருநாள் ரன்களை எடுத்த சாதனையை நிகழ்த்தினார்.
ஏரோன் பிஞ்ச் 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் அடித்து நொறுக்கினார். இம்ரான் தாஹிர் வந்துதான் அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
வார்னரும் பிஞ்சும் இணைந்து டேல் ஸ்டெய்ன், ரபாதாவை பிய்த்து உதற 12-வது ஓவரிலேயே ஸ்கோர் 100ஐ எட்டியது. ஸ்டெய்ன் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரிலேயே வார்னர் அவரை 2பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 17 ரன்களை விளாசினார். 7-வது ஓவரில் ஸ்டெய்னை பிஞ்ச் ஒரு அருமையான பிளிக் சிக்ஸும் ஒரு புல் சிக்சும் அடித்தார். ஸ்டெய்ன் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் டேல் ஸ்டெய்ன் தனது 10 ஓவர்களில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஸ்டெய்ன் மோசமாக வீசினார் என்று கூறுவதற்கில்லை, வழக்கம் போல்தான் வீசினார், ஆனால் இன்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் பேசிவைத்து ஸ்டெய்னுக்குப் ‘பூசை’ நடத்தினால்தான் தென் ஆப்பிரிக்காவை ஆதிக்கம் செலுத்த முடியும் என்று முடிவு கட்டி ஆடினர், இதில் ரபாதாவும் சிக்கிச் சின்னாபின்னமானார்.
பிஞ்ச் ஆட்டமிழந்த பிறகு ஸ்மித், வார்னர் ஜோடி 2-வது விக்கெட்டுக்காக சுமார் 21 ஓவர்களில் 124 ரன்களைச் சேர்த்தனர். வார்னரும் இம்ரான் தாஹிரிடம் வீழ்ந்து விட, பெய்லி இறங்கி தன் பங்கிற்கு 18 பந்துகளில் 28 ரன்களை விளாசினார், இவரும் ஸ்மித்தும் இணைந்த் 3-வது விக்கெட்டுக்காக 6 ஓவர்களில் 46 ரன்களை விளாசினர். பெய்லி பெலுக்வாயோ பந்தில் டு பிளெசிஸ் பிடித்த அபார கேட்சிற்கு வெளியேறினார் அதேபோல் மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் டேவிட் மில்லர் பிடித்த மேலும் அபாரமான கேட்சிற்கு ஸ்டெய்ன் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித் 47-வது ஓவரில் ஸ்டெய்னிடம் பவுல்டு ஆனார்.
டிராவிஸ் ஹெட், ஸ்டெய்னின் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுமாறு 49வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்க வேட் இறங்கி அவர் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுக்க மேத்யூ வேட் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். டுமினி மட்டுமே சிக்கனமாக வீசி 6 ஓவர்களில் வெறும் 32 ரன்களை கொடுத்தார். கடைசி 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 101 ரன்களை விளாசியது. இதில் கடைசி 5 ஓவர்களில் 65 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கு 372 ரன்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT