Published : 05 Sep 2022 02:41 PM
Last Updated : 05 Sep 2022 02:41 PM
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டத்தில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற உலக சாதனையாளரும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரஃபேல் நடால், பிரான்ஸின் ரிச்சர்ட் கேஸ்குயிட்டை எதிர்த்து விளையாடினார். இதில் நடால் 6-0, 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை எதிர்த்து நடால் விளையாட உள்ளார். போட்டியின் 3-ம் நிலை வீரரும், ஸ்பெயினைச் சேர்ந்தவருமான கார்லோஸ் அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜென்சனை தோற்கடித்தார்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றுப் போட்டியில் குரோஷியா வீரர் மரின் சிலிச்சும், பிரிட்டன் வீரர் டி. இவான்ஸும் மோதினர். இதில் மரின் சிலிச் 7-6, 6-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
முதல் செட்டை வெல்வதற்கு 2 வீரர்களும் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கடும் போராட்டத்துக்குப் பின்னர் முதல் செட்டை மரின் சிலிச் வென்றார். ஆனால் 2-வது செட்டை டி.இவான்ஸ் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து 3, 4-வது செட்களில் சுதாரித்து விளையாடிய மரின் சிலிச், டி. இவான்ஸை வீழ்த்தினார். இதையடுத்து 4-வது சுற்றுக்கு மரின் சிலிச் முன்னேற்றம் கண்டார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டேவிஸைச் சாய்த்தார். பெலாரஸ் வீராங்கனை அசரென்கா, செக். குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரும் 3-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான கார்பைன் முகுருஜா அதிர்ச்சித் தோல்வி கண்டார். ஸ்பெயின் வீராங்கனையான அவர் 3-வது சுற்றில் 7-5, 3-6, 6-7 (10-12) என்ற கணக்கில் செக். குடியரசு வீராங்கனை பெட்ரோ குவிட்டோவாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.
இதுவரை ரஃபேல் நடாலும், பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்குயிட்டும் 18 முறை மோதியுள்ளனர். இதில் 18 முறையும் ரஃபேல் நடாலே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT