Published : 12 Oct 2016 04:29 PM
Last Updated : 12 Oct 2016 04:29 PM
பெண் பாலின சோதனையில் தகுதி பெறவில்லை என்று கூறப்பட்டு 2006-ல் இருந்து போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்ட தடகள வீராங்கனை சாந்திக்கு நீதிகிடைக்கத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்கிறார் பாலின உரிமைப் போராளி கோபி ஷங்கர்.
மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தற்காலிக பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் தடகள வீராங்கனை சாந்திக்கு தடை காரணமாக ஊடகங்களிடம் பேச அனுமதி கிடையாது. பாலின உரிமைப் போராளியான கோபி ஷங்கர், சாந்திக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழக தடகள வீராங்கனை சாந்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண். 2006-ல் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் சாந்தி.
அதன்பிறகு பாலின சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சாந்திக்கு ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருப்பதாகக் கூறப்பட்டு, அவரின் அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. வெள்ளி மங்கை சாந்தி கொஞ்ச காலம் செங்கல் சூளையில் வேலை செய்துவிட்டு, இப்போது ஒப்பந்த அடிப்படையில் தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தற்காலிகப் பயிற்சியாளராக மயிலாடுதுறையில் பணிபுரிந்து வருகிறார்.
தமிழக வீராங்கனை சாந்திக்கு ஏற்பட்ட அதே சிக்கல் ஒடிஷா வீராங்கனை டூட்டி சந்துக்கும் ஏற்பட்டது. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒடிஷா அரசு அதைக் கடுமையாக எதிர்த்து, வீராங்கனைக்கு ஆதரவாக இருந்தது. தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஹார்மோன்களை மட்டும் அடிப்படையாக வைத்து பாலினத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் தவறு, அறிவியல் பூர்வமற்றது என்று கூறி பெண் பாலின பரிசோதனை விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது. சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளனம், பாலின பரிசோதனை முறை குறித்து உரிய பதில் தாக்கல் செய்யாத பட்சத்தில், பாலின பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும் என்று தீர்ப்பளித்தது.
டூட்டி சந்துக்கு நீதி கிடைத்து அவர் கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற நிலையில், தமிழ்ப்பெண் சாந்திக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சாந்தி திரும்பவும் போட்டியில் கலந்துகொள்ள மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு, மத்திய அரசிடம் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி வலியுறுத்த வேண்டும்.
தொடர்ந்த போராட்டத்தின் சிறு வெற்றியாக, இப்போது தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில் சாந்திக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு கோரியுள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு சாந்திக்கு உரிய நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்கிறார் கோபி ஷங்கர்.
கோபி ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT