

துபாய்: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி இறுதி ஓவர் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.
அந்த அணிக்காக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அந்த அணிக்கு வலுவான தொடக்க தேவைப்பட்டது. இருந்தும் பாபர் 14 ரன்களில் அவுட்டானார். ஃபாக்கர் ஜாமான், 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பிறகு வந்த முகமது நவாஸ் உடன் இணைந்து இந்திய அணியின் பந்துவீச்சை கவுன்ட்டர் அட்டாக் செய்தார் ரிஸ்வான். இருவரும் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நவாஸ், 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆசிஃப் அலி, 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது பாகிஸ்தான். அதன் மூலம் அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா மற்றும் சஹால் என இருவரும் 4 ஓவர்கள் வீசி 40 ரன்களுக்கு மேல் ரன்களை கொடுத்திருந்தனர். புவனேஷ்வர், 40 ரன்கள் கொடுத்திருந்தார். 18-வது ஓவரில் இந்திய வீரர் அர்ஷ்தீப் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டிருந்தார். அந்த கேட்ச் ஆட்டத்தின் முடிவில் சிறிய அளவில் மாற்றம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். பவர் பிளே ஓவர்களில் இருவரும் சிறப்பாக ரன்களை சேர்த்தனர். 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் ரோகித். தொடர்ந்து களத்திற்கு கோலி வந்தார். மறுமுனையில் ராகுல் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ரிஷப் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தீபக் ஹூடா, 16 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
44 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அவுட்டானார் கோலி. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. ஷதாப் கான், 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். நசீம் ஷா, முகமது ஹன்சைன், ஹாரிஸ் ராஃப், முகமது நவாஸ் போன்ற பவுலர்கள் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.