Published : 02 Sep 2022 05:07 AM
Last Updated : 02 Sep 2022 05:07 AM
மெல்பர்ன்: ஆடவருக்கான ஐசிசி டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த மிட்செல் ஸ்வெப்சன் நீக்கப்பட்டு அதிரடி பேட்ஸ்மேனான டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.
டிம் டேவிட், சிங்கப்பூரில் வாழும் ஆஸ்திரேலிய தம்பதியினருக்கு பிறந்தவர். டிம் டேவிட் தனது 2 வயதிலேயே ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு இடம்பெயர்ந்தார். இருப்பினும் டிம் டேவிட் சிங்கப்பூர் கிரிக்கெட் அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி 558 ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது ஐசிசி விதிமுறைகளின்படி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதற்கான அனைத்து தகுதிகளையும் டிம் டேவிட் பூர்த்தி செய்துள்ளதைத் தொடர்ந்து அவரை டி 20 உலகக் கோப்பைக்கான அணியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளில் டிம் டேவிட் 86 டி 20 ஆட்டங்களில் விளையாடி 168.40 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,874 ரன்கள் விளாசியுள்ளார். சராசரியாக 4.5 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி அடித்துள்ளார். 16 முதல் 20 ஓவரில் டிம் டேவிட்டின் ஸ்டிரைக் ரேட் 204.80 ஆக உள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் டிம் டேவிட்டின் அதிரடியை பார்த்து ஐபிஎல் தொடரில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.8.25 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. பிக்பாஸ் டி 20 தொடரிலும் டிம் டேவிட் சில அணிகளுக்காக விளையாடி உள்ளார்.
உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அதே அணியே இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் டேவிட் வார்னருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், மேத்யூ வேட், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், அஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT