Published : 02 Sep 2022 05:14 AM
Last Updated : 02 Sep 2022 05:14 AM
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை எதிர்த்து விளையாடினார். இதில் மேத்வதேவ் 6-2, 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
டேனியல் மேத்வதேவ் 3-வது சுற்றில் சீனாவின் வூ யிபிங்குடன் மோதுகிறார். தரவரிசையில் 174-வது இடத்தில் உள்ள வூ யிபிங் 2-வது சுற்றில் 6-7(3), 7-6(4), 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் 46 நிமிடங்கள் போராடி 104-ம் நிலை வீரரான போர்ச்சுகலின் நுனோ போர்ஹெஸை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றுக்கு முன்னேறிய முதல் சீன வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வூ யிபிங்.
இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எமிலியோ நவாவையும், 5-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு 6-7 (4-7), 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டிம் வான் ரிஜ்தோவனையும் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினர். ஸ்பெயினின் பாப்லோ கரேனோ பஸ்டா, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், ரஷ்யாவின் கரேன் கச்சனோவ் ஆகியோரும் 3-வது சுற்றில் நுழைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தரவரிசையில் 605-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 2-வது இடத்தில் உள்ள எஸ்டோனியாவின் அனெட் ஹோண்டவிட்டை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டததில் 40 வயதான செரீனா வில்லியம்ஸ் 7-6(4), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். உக்ரைனின் தரியா ஸ்னிகுர் 3-6, 6-7 என்ற நேர் செட்டில் கனடாவின் ரெபேக்கா மரினோவிடம் தோல்வியடைந்தார்.
12-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃப் 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ருமேனியாவின் கேப்ரியேலா ரூஸையும், 17-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனா கலின்ஸ்காயாவையும், 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எலிசபெத் மாண்ட்லிக்கையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால் பதித்தனர். கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு 6-2, 6-4 என்ற நேர் செட்டில் 15-ம் நிலை வீராங்கனையான பீட்ரிஸ் ஹடாத் மியா வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT