Published : 08 Oct 2016 02:38 PM
Last Updated : 08 Oct 2016 02:38 PM
வங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் விளாசல் சதத்தின் மூலம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 47.5 ஓவர்களில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தின் அறிமுக வீச்சாளர் ஜேக் பால் அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார், இதனால் இம்ருல் கயேஸ் (117), ஷாகிப் உல் ஹசன் (79) ஆகியோரது மிரட்டல் வெற்றியில் முடியாமல் போனது.
இம்ருல் கயேஸ் 119 பந்துகளில் 11 பவுண்டரிகல் 2 சிக்சர்களுடன் 112 ரன்களை எடுக்க ஷாகிப் உல் ஹசன் 55 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 79 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 17.2 ஓவர்களில் 5வது விக்கெட்டுக்காக 118 ரன்கள் சேர்த்து ஸ்கோரை 42-வது ஓவரில் 271 ரன்களுக்கு உயர்த்திய போது வங்கதேசம் 310 ரன்களை வெற்றிகரமாகத் துரத்தும் என்ற நிலையே இருந்தது. ஆனால் கடைசி 6 விக்கெட்டுகளை 17 ரன்களுக்கு இழந்தது வங்கதேசம்.
இம்ருல் கயேஸ் லெக் திசையில் அபாரமாக சில ஹிட்களை ஆடினார். குறிப்பாக துரத்தல் தொடங்கி கிறிஸ் வோக்ஸ் வீசிய 3-வது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே விழுந்த லெந்த் பந்தை ஒரே சுழற்று சுழற்ற லெக் திசையில் ஸ்கொயர் லெக் திசையில் அதிர்ச்சிகர சிக்ஸ் ஆனது. ஆற்றல் வாய்ந்த ஷாட் அது. இங்கிலாந்துக்கு அவர் அறிவுத்திய அறிவிப்பாகவே தெரிந்தது. ஆனால் அடுத்து ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார், இது தரையோடு சென்றது என்றாலும் அவர் நினைத்தபடி ஆடிய ஷாட் அல்ல அது. தனது 11வது பவுண்டரி மூலம் 105 பந்துகளில் சதம் கண்டார் இம்ருல் கயேஸ்.
ஷாகிபுல் ஹசன் 12 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் என்று ஆக்ரோஷம் காட்ட தேவைப்பட்ட ரன் விகிதம் குறையத் தொடங்கியது. 52 பந்துகளில் 39 ரன்கள் என்று வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்பு இருந்த தருண்டத்தில் 6 விக்கெட்டுகள் மீதமிருந்தன. ஆனால் ஜேக் பால் பந்தை ஷாகிப் புல் ஷாட்டை சரியாக ஆடாமல் டேவிட் வில்லேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் அடுத்த வீரர் மொசாடெக் ஹுசைன் பவுல்டு ஆனார்.
இம்ருல் கயேஸ் ஒரு முனையில் நிற்க கேப்டன் மஷ்ரபே மொர்டாசா, அடில் ரஷீத்திடம் அவுட் ஆனார். பவுண்டரி தேவைப்படும் நிலையில் இம்ருல் கயேஸ், அடில் ரஷித் பந்தை மேலேறி வந்து பந்தைக் கோட்டை விட பட்லர் ஸ்டம்ப்டு செய்தார் 112 ரன்கள் என்ற அபார இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது, அத்துடன் வங்கதேச கனவும் முடிவுக்கு வந்தது. 288 ரன்களுக்கு முடிந்தது. அறிமுக வீச்சாளர் ஜேக் பால் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அடில் ரஷித் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த போது அறிமுக வீரர் பென் டக்கெட் 60 ரன்களை 78 பந்துகளில் எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 100 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடி 41 ரன்களை எடுகக், ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசினார். கடைசி 9 ஓவர்களில் 79 ரன்கள் விளாசப்பட்டது. வங்கதேச தரப்பில் மோர்டசா, ஷைபுல் இஸ்லாம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக இங்கிலாந்து வீரர் பால் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT