Published : 18 Oct 2016 10:53 AM
Last Updated : 18 Oct 2016 10:53 AM
துபாயில் பிங்க் பந்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளின் கடுமையான போராட்டத்துக்கு இடையே பாகிஸ்தான் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று பாகிஸ்தான் முன்னிலை பெற்றது. 4-ம் நாள் தேவேந்திர பிஷூவின் 8 விக்கெட்டுகளால் மே.இ.தீவுகளுக்கு ஒரு வெற்றி வாய்ப்பை உருவாக்க 95/2 என்று 5-ம் நாள் களமிறங்கிய மே.இ.தீவுகள் கடைசி வரை போராடி 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சுவர் போல் நின்ற டேரன் பிராவோவின் அபார டெஸ்ட் சதம்:
வெற்றி பெற 83 ரன்கள் இருக்கும்போது 249 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 116 ரன்கள் எடுத்த டேரன் பிராவோ, யாசிர் ஷாவின் பந்துக்கு தன் வலது காலை பந்து பிட்ச் ஆன இடத்துக்கு நகர்த்தாமல் டிரைவ் ஆட முயல, பந்து மட்டையின் உள் விளிம்பில் பட்டு யாசிர் ஷாவிடமே கேட்ச் ஆனது.
அதுவரை ஆட்டம் பாகிஸ்தான் கைகளிலிருந்து நழுவிக் கொண்டுதான் இருந்தது. லாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 153 நாட் அவுட் என்று ஆடி தனி ஒருவராக வெற்றி பெற்றதைப் போன்ற ஒரு இன்னிங்ஸ் இது. லாரா அளவுக்கு இவரிடம் சரளம் இல்லை, ஆனால் சந்தர்பாலின் பொறுமையும், லாராவின் உறுதியும் கலந்திருந்த ஒரு இன்னிங்ஸாக இது அமைந்தது.
மொஹீந்தர் அமர்நாத் ஒருமுறை பாகிஸ்தானில் விரோதமான நடுவர் தீர்ப்புகளுக்கு மத்தியில் 109 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியை டிரா செய்து கொடுத்த இன்னிங்ஸ் நினைவுக்கு வருகிறது. அன்றும் ஏகப்பட்ட பவுன்சர்களை அவர் உடம்பில் வாங்கினார், சிலவற்றை புல், ஹூக் செய்தார். ஆனால் விக்கெட்டை கொடுக்கவில்லை. அதேபோல் நேற்றும் அமீர், வஹாப் ரியாஸின் ஷார்ட் பிட்ச் பந்துகளில் ஓரிரு முறை அடிவாங்கினர், மற்றபடி முழுக் கட்டுப்பாட்டுடன் விலகினார்.யாசிர் ஷாவின் சோதனைகளை உறுதியான உத்திகள் மூலம் எதிர்கொண்டார்.
கடைசியில் ஜேசன் ஹோல்டர் அந்த ஒரு ரன்னை எடுத்திருக்காவிட்டால் டேரன் பிராவோ ஒரு வேளை அவுட் ஆகியிருக்க மாட்டாரோ என்னவோ? ஆனாலும் ஆஃப் திசையில் சில கட்கள், டிரைவ்கள் கண்ணுக்கினியதாக இருந்தது, இந்த இன்னிங்ஸ் சரளம் பற்றியதல்ல உறுதியைப் பற்றியது என்பதை பிராவோ தனது ஆட்டத்தின் மூலம் அறிவித்தபடியே இருந்தார்.
காலையில் மர்லன் சாமுவேல்ஸ் முதல் பந்தில் மொகமது ஆமிர் பந்தில் தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். ஒருமணிநேர ஆட்டத்திற்குள் ஜெர்மைன் பிளாக்வுட்டும் மொகமது நவாஸ் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார்.
ராஸ்டன் சேஸ், டேரன் பிராவோ இணைந்து 77 ரன்களை போராடி 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். சேஸ் 35 ரன்களில் யாசிர் ஷாவிடம் பவுல்டு ஆனார்.
அதன் பிறகு பிராவோதான் கடைசி செஷனில் ஒரு மணி நேரம் வரை அவர் அணியின் சுமையை சுமந்தார். கடைசியில் களைப்படைந்த ஒரு ஷாட்டில் யாசிர் ஷாவின் அருமையான கேட்சிற்கு வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் ஷேன் டவ்ரிச்சை வஹாப் ரியாஸ் யார்க்கரில் வெளியேற்றினார். ஜேசன் ஹோல்டரும், பிராவோவும் இணைந்து 69 ரன்களைச் சேர்த்தனர். ரன்கள் முக்கியமல்ல சுமார் 24 ஓவர்களை இருவரும் ஆடினர். ஹோல்டர் கடைசி வரை நாட் அவுட்டாக இருந்து 40 ரன்களை சேர்த்தார்.
பிஷூ 3 ரன்களில் நவாஸிடம் எல்.பி.ஆக, கமின்ஸ், கேப்ரியல் இருவரும் ரன் அவுட் ஆக பிராவோ ஆட்டமிழந்த பிறகு 15 ஓவர்கள் தாக்குப் பிடித்த மே.இதீவுகள் கடைசியில் 109 ஓவர்களில் 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மொகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா, நவாஸ் முறையே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக முச்சதம் கண்ட அசார் அலி தேர்வு செய்யப்பட்டார். இந்த அருமையான டெஸ்ட் போட்டியை மைதானத்தில் மொத்தம் 100 பேர் பார்த்திருந்தால் பெரிய விஷயம் என்றே தெரிகிறது. காலி மைதானத்தில் இரு அணிகளும் இத்தகைய 'ஸ்பிரிட்டான' கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது மிகப் பெரிய விஷயமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT