Published : 31 Aug 2022 12:46 PM
Last Updated : 31 Aug 2022 12:46 PM
14 ஆண்டுகளுக்கு முன்னர் ஹாங்காங் அணிக்கு எதிராக முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடிய தரமான இன்னிங்ஸை கொஞ்சம் ரீவைண்ட் பார்ப்போம். அந்தப் போட்டியில் தோனி சதம் விளாசி இருந்தார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதல் சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. இந்தப் போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இரு அணிகளும் நேருக்கு நேர்! - இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் இதுவரை இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளன. அந்த இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அதன் மூலம் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை விளையாடியது இல்லை. துபாய் கிரிக்கெட் போட்டி தான் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள முதல் டி20 போட்டி. இதில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார் ஹாங்காங் அணியின் கேப்டன் நிசாகத் கான் (Nizakat Khan).
ருத்ரதாண்டவம் ஆடிய தோனி! - கடந்த 2008 வாக்கில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடியது. அந்தப் போட்டி பாகிஸ்தானில் உள்ள கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் ‘பி’ பிரிவில் விளையாடி இருந்தன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. கம்பீர் மற்றும் சேவாக் என இருவரும் இந்திய அணிக்கு அசத்தலான தொடக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சேவாக், 78 ரன்கள் எடுத்து அவுட்டானார். கம்பீர் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த ரோகித் சர்மா, 11 ரன்களில் அவுட்டானார். பின்னர் நான்காவது விக்கெட்டுக்கு ரெய்னாவும், கேப்டன் தோனியும் இணைந்தனர். இருவரும் 166 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 96 பந்துகளில் 109* ரன்களை சேர்த்தார் தோனி. இறுதி வரை அவர் விக்கெட்டை இழக்கவில்லை. அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
மறுபக்கம் விளையாடிய ரெய்னா 68 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்தார். 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார். அதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை விரட்டிய ஹாங்காங் அணி 118 ரன்களில் அவுட்டானது. பியூஷ் சாவ்லா, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். தோனி இது போல பல தரமான இன்னிங்க்ஸை விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT